தமிழகம்

‘இஸ்ரோ’ விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்திய சந்திரயான்-2 நிலவை சுற்றுகிறது: செப். 7-ம் தேதி நிலவில் தரை இறங்கும்

செய்திப்பிரிவு

வி.தேவதாசன்

சென்னை

இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனத்தால் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண் கலம், 29 நாட்களுக்குப் பிறகு நேற்று வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. தற்போது நிலவைச் சுற்றி வரும் விண்கலம், வரும் செப்டம்பர் 7-ம் தேதி திட்டமிட்டபடி தரையிறங்கும்.

நிலவின் தரைப்பகுதியில் இறங்கி ஆராயும் நோக்கில் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. தரையில் இருந்து புறப்பட்ட 16-வது நிமிடத் தில் புவியின் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இந்த விண் கலம், கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி வரை பூமியைச் சுற்றி வந்தது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை விண்கலத்தின் சுற்றுப் பாதை 5 முறை மாற்றியமைக் கப்பட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி திரவ எரிவாயு இயந்திரத்தின் உதவியால் பூமியின் ஈர்ப்பு விசைப் பகுதிக்கு வெளியே சந்திரயான்- 2 உந்தித் தள்ளப்பட்டது. பின்னர் நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதியை நோக்கி கடந்த 6 நாட்களாக சந்திரயான்- 2 பயணம் செய்தது.

இந்நிலையில், நேற்று காலை நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதி அருகே விண்கலம் நெருங்கிச் சென்றது. அப்போது, திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப் பட்டு நிலவின் ஈர்ப்பு விசைப் பகுதிக்குள் விண்கலம் உந்தித் தள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட் டப் பாதையில் சந்திரயான்-2 சுற்றி வரத் தொடங்கியது.

இதன்மூலம், சந்திரயான்-2 தனது பயணத்தின் மிக முக் கியமான ஒரு கட்டத்தை வெற்றி கரமாக அடைந்திருப்பது குறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் மகிழ்ச்சி தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு வில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: சந்திரயான்-2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப் பாதை யில் செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை காலை 9.02 மணி முதல் சுமார் 29 நிமிடங்கள் விண்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள திரவ எரிவாயு இயந்திரம் இயக்கப்பட்டது. நிலவின் தரைப் பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 114 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 18 ஆயிரத்து 72 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் தற்போது நிலவைச் சுற்றி வருகிறது.

இன்று (புதன்கிழமை) மதியம் சுமார் 12.30 மணிக்கு நிலவைச் சுற்றிவரும் சுற்றுவட்டப் பாதை மாற்றி அமைக்கப்படும். இதேபோல் வரும் செப். 1-ம் தேதி வரை மொத் தம் 4 முறை சுற்றுவட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் நிலவின் தரைப் பகு திக்கும் விண்கலத்துக்குமான உய ரம் படிப்படியாக குறைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து செப்டம் பர் 2-ம் தேதி விக்ரம் என்று பெயரிடப் பட்டுள்ள லேண்டர் பகுதி, ஆர்பிட் டரில் இருந்து பிரிக்கப்படும். அதன் பிறகு நிலவின் தரைப்பகுதியில் இருந்து குறைந்தபட்சம் 30 கி.மீ. மற்றும் அதிகபட்சம் 100 கி.மீ. தொலைவுள்ள சுற்றுவட்டப் பாதை யில் லேண்டர் செலுத்தப்படும். அதன் தொடர்ச்சியாக, லேண்டரை தரையிறங்கச் செய்யும் மிகவும் சவலான, சிக்கலான பல நடவடிக் கைகள் அடுத்தடுத்து நடைபெறும்.

இறுதியாக செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை நேரத்தில் சந்திரயான்- 2 விண்கலத்தின் லேண்டர் மிகவும் மெதுவாக நிலவின் தரையில் இறக் கப்படும். லேண்டர் தரையிறங்கிய சில மணி நேரத்துக்குப் பிறகு, பிரக்யான் என்று பெயரிடப்பட் டுள்ள ரோவர் இயந்திரம் லேண்ட ரில் இருந்து கீழே இறங்கி, நிலவின் தரைப்பகுதியில் நகரத் தொடங்கும். இவ்வாறு சிவன் கூறினார்.

சந்திரயான் விண்கலத்தின் லேண்டர், ரோவர் பகுதிகள் 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் இருக்கும் எனவும் அப்போது, மொத்தம் சுமார் 500 மீட்டர் தூரத் துக்கு ரோவர் நகர்ந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது. திட்டமிட்டபடி ரோவர் வெற்றிகரமாக நகரும்பட் சத்தில், நிலவின் நீர் இருப்பு, தரையின் அதிர்வு, அங்குள்ள பாறைகளின் புவியியல் தன்மை உள்ளிட்ட பல அம்சங்கள் பற்றிய ஏராளமான புதிய தகவல்கள் கிடைக் கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பிரதமர் மோடி வாழ்த்து

சந்திரயான்-2 விண்கலம் வெற்றி கரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திர யான்-2 நுழைந்ததன் மூலம், நிலவை நோக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் பயணத்தின் மிக முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்த உச்சத்தை வெற்றிகரமாக அடைந் ததற்காக இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.பிரதமர் பாராட்டு

SCROLL FOR NEXT