தமிழகம்

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்: சென்னை வட்ட பிஎஸ்என்எல் அறிவிப்பு

எம்.மணிகண்டன்

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை முன்னிட்டு பள்ளி மாணவர் களுக்கு தொலைத்தொடர்பு சார்ந்த வகுப்புகளை நடத்த பிஎஸ்என்எல் சென்னை வட்டம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் சென்னை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் என்னும் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை வட்டத்தில் ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் ஆகிய இணைப் பகங்கள் அடுத்த தலைமுறை நெட்வொர்க் முறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டன. திருத்தணியிலும் அந்த முறை அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் லேண்ட்லைன் வைத்திருப்பவர்கள் கூட வீடியோ கால், இணைய வாய்ஸ் கால் போன்ற சேவைகளை பெற முடியும்.

இந்த சூழலில் தொலைத்தொடர்பு சார்ந்த தொழில்நுட்ப அறிவை பள்ளி மாணவர்கள் பெறும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்தவும் முடிவு செய்துள்ளோம். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு பிஎஸ்என்எல் சென்னை தொலைத்தொடர்பு வட்ட அலுவலகத்தில் சிறப்பு வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகுப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வரலாறு, சேவைகள் வழங்கும் முறை, இயந்திரங்கள் தொழில்நுட்ப நுணுக்கங்கள், போன்றவை பற்றி பாடம் நடத்தப்படும். இதற்காக பள்ளி முதல்வர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT