பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்: புதுச்சேரி சொசைட்டி கல்லூரிகளில் உள்ளிருப்புப் போராட்டம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரியில் உள்ள 21 சொசைட்டி கல்லூரிகளில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அரசாணை வெளியிடத் தாமதமாவதால் 4,500 பேராசிரியர்கள், ஊழியர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்கினர்.

புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அரசின் கீழ் 30 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 8 அரசுக் கல்லூரிகளும், ஒரு சட்டக்கல்லூரியும் 21 சொசைட்டி கல்லூரிகளும் உள்ளன. இதனிடையே மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசுக் கல்லூரிகளுக்கும், சட்டக்கல்லூரியில் பணிபுரிவோருக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது.

அதில் 21 சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் 4,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கோரி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனால் மாணவர்களின் கல்வி கடும் பாதிப்புக்கு உள்ளானது.

இதனைத் தொடர்ந்து சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த ஏப்ரல்-1 ஆம் தேதி 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி உறுதி அளித்தார். 4 மாதம் ஆகியும் சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவது தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை.

இதைக் கண்டித்து புதுச்சேரியில் உள்ள 21 சொசைட்டி கல்லூரிகளைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை இன்று (ஆக.20) தொடங்கி உள்ளனர். இதனால் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமில்லாமல் நோயாளிகளும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT