சட்டப்பேரவை செயலரிடம் எதிர்க்கட்சியினர் கடிதம் 
தமிழகம்

புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் கடிதம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி

புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைச் செயலரிடம் அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு திமுக கூட்டணியுடன் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வருகின்றது. சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். தற்போது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயரிடம் வழங்கினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, "காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் சபாநாயகர் சிவக்கொழுந்து தொடர்ந்து பங்கேற்கிறார். அவர் சபையை நடுநிலையாக நடத்தமாட்டார் என்ற காரணத்தினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 4-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பிறந்த நாள் கொண்டாடியபோது நேரில் சென்று வாழ்த்தியவர் சபாநாயகர் சிவக்கொழுந்து என்பது குறிப்பிடத்தக்கது.

செ.ஞானபிரகாஷ்

SCROLL FOR NEXT