தேநீர், காபியின் விலை ரூ.12 ஆக அதிகரிப்பு 
தமிழகம்

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி: கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி

ஆவின் பால் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் டீ, காபி விலை அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசு அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அறிவித்தது. இதையடுத்து ஆவின் பால் விலையை ரூ.6 அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து, ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர இருக்கிறது. ஆவின் வாடிக்கையாளராக உள்ள மாத அட்டைதாரர்கள் கூடுதலாக ரூ.180 கட்ட வேண்டும்.

இந்த நிலையில் ஆவின் பால் விலை உயர்வைக் காரணம் காட்டி கள்ளக்குறிச்சியில் உள்ள தேநீர் கடைகளில் ரூ.2 அதிகரித்து ஒரு டீயின் விலை ரூ.12-க்கு விற்பனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே சில பகுதிகளில் ரூ.8, மற்ற சில பகுதிகளில் ரூ.10-க்கும் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தேநீர் கடைகளில் ஒரு தேநீர் ரூ.12-க்கும், காபி ரூ.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி நகர குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் கணேசமூர்த்தி கூறுகையில், "அரசு ஆவின் பால் விலையைத்தான் உயர்த்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான தேநீர் கடைகளில் தனியார் பால் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பாலில் தேநீர் விற்பனை எண்ணிக்கை மிகச் சொற்பமே. ஆனால் அனைவரும் சகட்டு மேனிக்கு திடீரென விலையை உயர்த்தியிருப்பது, ஏழை எளியோரை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குறிப்பாக மருத்துவமனைப் பகுதிகளில் இயங்கி வரும் தேநீர் கடையை நம்பியே நோயாளிகள் உள்ளனர். பல ஏழைகள் டீயைப் பருகியே பசியை ஆற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் வயிற்றில் அடிப்பது போல் தேநீர் விலையை உயர்த்துவது கண்டனத்துக்குரியது. எனவே தேநீர் கடைகளில் விற்பனையை உயர்த்துவதை தேநீர் விற்பனை உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

என்.முருகவேல்

SCROLL FOR NEXT