சென்னை
பால் விலையை உயர்த்தாமல், மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஆவின் பால் விலையை திடீரென்று லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது. சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரை மிகப்பெரிய அளவில் இந்த விலை உயர்வு பாதிக்கும்.
மறுபரிசீலனை செய்க
பால் ஊட்டச் சத்துணவு. ஏழை, எளிய தொழிலாளர்கள், வீட்டில் உள்ளவர்களுக்கு காபி, டீ அருந்துதல் தவிர்க்க முடியாத அன்றாடப் பழக்கமாகிவிட்ட நிலையில், பால், முட்டை போன்றவற்றின் விலைகளை தமிழக அரசு உயர்த்தி, மக்களின், குடும்பத் தலைவிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல், தவிர்க்க வேண்டும் . இந்த விலை உயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும்.
மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையைத் தர வேண்டாமா என்ற கேள்வி எழலாம். அது மக்கள் நல அரசில் பல இலவசத் திட்டங்கள் தருவதைக் கூட குறைத்து, இவர்களுக்கு விலை குறைத்து, உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையைக் கூட்டி, மானியம்
போன்ற உதவித் தொகை தருவதுபோல தரலாம்.
மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைக்கலாம்!
பால் விலையை ஏற்றாமல், டாஸ்மாக்கில் விற்கப்படும் போதை மது வகைகளுக்கு விலை ஏற்றலாம். அத்தொகை கூடுதல் வருமானம். அதிக விலை என்பதால், டாஸ்மாக் குடிகாரர்களின் கொள்முதல் குறைந்து, குடிப்பவர்கள் அளவும் குறைந்தால், அவர்களுக்கும் அரசுக்கும் ஆரோக்கியமானது.
எனவே, மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து, உற்பத்தியாளர் நலன், உரிமை, நுகர்வோர் நலன், உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டியது அவசியம்", என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.