சென்னை
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், "வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, திருச்சியில் 13 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 8 செ.மீ., பெரம்பலூர் மாவட்டத்தில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
ஜூன் 1 முதல் இன்றைய தினம் வரை தமிழகத்தில் 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 5 செ.மீ. அதிகம்", என புவியரசன் தெரிவித்தார்.