மதுரை,
மதுரை அருகே உள்ள அரசுப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்ற புகாரை நேரடியாக விசாரிப்பதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை வந்துள்ளார்.
இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் இன்று அவர் அளித்த பேட்டி:
''தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் இப்போது நிறைய வழக்குகளை விசாரணை செய்து வருகிறது. குறிப்பாக பட்டியல் இன மக்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.8 லட்சத்து 25 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எல்லா இடங்களிலும் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்திலும் வழங்கப்படுகிறது.
கூடுதல் இழப்புத் தொகையைப் பொறுத்தவரை தமிழகத்தில் அரசாணை போடப்பட்டுள்ளது. அதன்படி முதல் 3 மாதத்தில் வேலை வழங்க வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர் பொறுப்பு.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு கூட கோவை மாவட்டத்தில் ஆணவக் கொலை வழக்கில் ஒரு பெண்ணின் தாயாருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மதுரை மாவட்டத்தில் கூட வேலை வழங்கப் பட்டுள்ளது.
இதற்காக கமிஷன் சிறப்பு விசாரணை மூலம் மாநில தலைமைச் செயலாளர், டிஜிபி-க்கு வழிகாட்டுதல் செய்துள்ளோம். எஸ்.சி., எஸ்.டி., செயலாளருக்கும் இதனைப் பரிந்துரை செய்துள்ளோம்.
வேலை வாய்ப்பில் உடனடியாகவும், நிவாரணத் தொகை, வேலை வழங்கவும் கூறியுள்ளோம்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் ஓர் அரசுப் பள்ளியில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என பத்திரிகைச் செய்திகள் வந்துள்ளன. அங்கு மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என்பதற்காக நேரடியாகச் செல்கிறேன். இதற்காக மதுரை வந்துள்ளேன். இதேபோல் ஒண்டி வீரன் நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் வந்துள்ளேன்.
மதமாற்றப் புகார் பற்றி விசாரணை:
தலித்துகள் மதமாற்றம் செய்யப்படுவதாக எங்களிடம் புகார் வந்துள்ளது. ஒருமுறை மதம் மாறியிருந்தால் அவர்கள் எஸ்.சி., பட்டியலில் இருந்து வர மாட்டார்கள். இது குறித்துப் பல வழக்குகள் எங்களுக்கு வந்துள்ளன. இது தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் குறிப்பாக கேரளா, ஆந்திரா, ஒடிசா மாநில கடற்கரையோர மாவட்ட மக்களை மதமாற்றம் செய்வதாக குற்றசாட்டு வந்துள்ளது. இது குறித்து துணை குழு அமைத்து விசாரணை செய்து வருகிறோம்.
பரிசீலனையில் சிறப்புச் சட்டம்:
தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக சிறப்புச் சட்டங்கள் வேண்டும் கூறியுள்ளனர். இதுகுறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதலில் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா? என்பதைச் சோதிக்க 25 வழக்குகளுக்கு நானே நேரடியாகச் சென்று விசாரணை செய்துள்ளேன். எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு முருகன் கூறினார்.
-எஸ்.ஸ்ரீநிவாசகன்