கூடலூர்
ஓவேலி பகுதியில் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன சைனுதீன் என்பவரின் உடல், 12 நாட்களுக்குப் பின்னர் குண்டன்புழா ஆற்றின் அருகே மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை கிராமத்தைச் சேர்ந்த அபு என்பவரின் மகன் சைனூதீன். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 8-ம் தேதி பார்வுட் பகுதியில் இருந்து தனது நண்பர்கள் சிலருடன் எல்லமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. சீப்புரம் பகுதியில் சென்றபோது, இடதுபுறம் மேடான இடத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது.
இதைக் கண்ட சைனூதீன் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடினர். ஆனால், மண் சரிவில் சைனூதீன் சிக்கினார். மேலும் அசுர வேகத்தில் சேறு, சகதி மற்றும் வெள்ளம் ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மரங்களையும் அடித்து நொறுக்கியது. தங்கள் கண் எதிரே நண்பன் சைனூதீன் மண் சரிவில் சிக்கிக் காணாமல் போனதைக் கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.
இதைத் தொடர்ந்து சப்தம் கேட்டு அக்கம்பக்கத்து கிராம மக்களும் ஓடி வந்தனர். ஆனால், சுமார் 500 அடி உயரத்துக்கு மண் சரிவு ஏற்பட்டதால், மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி சைனூதீனை கிராம மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் அப்பகுதிக்கு வந்தனர்.
கிராம மக்களின் உதவியுடன் ராணுவ வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ இன்னசென்ட் திவ்யா, ''சைனூதீனின் உடலை கேரள மாநில எல்லை வரை தேடி விட்டோம். ஆனால், உடல் கிடைக்கவில்லை. இதனால், சைனூதீன் காணாமல் போனவர் பட்டியலிலேயே வைக்கப்பட்டுள்ளார்'' என்றார். இதனால் சைனூதீன் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.
நீலகிரி எம்பி ஆ.ராசா, ''சைனூதீன் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ணால் கண்ட காட்சி உள்ளதால், அதைக் கருத்தில் கொண்டு, சைனூதீன் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்யவேண்டும்'' என்றார். மேலும், சைனூதீன் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 12 நாட்கள் தேடுதல் பணிக்குப் பின்னர் இன்று காலை ஓவேலி பகுதியில் சைனூதீனின் உடல் குண்டன்புழா ஆற்றின் அருகே மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சைனூதீன் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்பு, அரசின் இழப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.