ஆர்.கிருஷ்ணகுமார்
ஆடையின் அடிப்படை மூலப் பொருளான பஞ்சு விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. மேலும், நூல் விலையும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரிய துறையாகத் திகழ்வது ஜவுளித் துறை. இவ்விரு துறைகளின் முதுகெலும்பாகத் திகழ்கிறது பருத்தி. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 3.50 கோடி பேல் பஞ்சு தேவைப்படுகிறது. ஏற்றுமதி தவிர, 2.50 கோடி முதல் 2.80 கோடி வரையிலான பேல் பஞ்சு உள்நாட்டில் ஜவுளித் துறையினரால் உபயோகப்படுத்தப்பட்டு, பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி ஆயத்த ஆடைகள் மூலம் கணிசமான அந்நியச் செலாவணியும் நமக்கு கிடைக்கிறது.
தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு கோடி பேலுக்கும் மேல் பஞ்சு தேவைப்படுகிறது. இங்குள்ள நூற்பாலைகள், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்குகின்றன.
கடந்த 5, 6 ஆண்டுகளாக இந்திய பருத்தி வணிகம் உலகமயமாக்கப்பட்ட நிலையில், அதன் தாக்கம் ஜவுளித் துறையில் கடுமையாக எதிரொலிக்கிறது. குறிப்பாக, நடப்பு பருத்தி ஆண்டில் (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) பல்வேறு குழப்பங்கள், நெருக்கடிகள் உண்டாகி, நூற்பாலைத் துறையினர் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
சீசன் தொடக்கத்திலேயே அதிர்ச்சி!
பருத்தி சீசன் தொடக்கமான அக்டோபர் மாதத்திலேயே, எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு கண்டி பஞ்சு ரூ.45,500-க்கு விற்பனையானது. நவம்பர் மாதத்தில் இது ரூ.47,500-ஆக உயர்ந்து ஜவுளித் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் படிப்படியாக குறைந்து ஜனவரி மாதத்தில் ரூ.43,000 என்ற விலையை எட்டியது. ஆனால், மார்ச் மாதத்தில் மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து ரூ.46,500-ஆனது. ஏப்ரல் மாதத்தில் ரூ.48 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. ஜூலை மாதத்தில் மீண்டும் விலை குறையத் தொடங்கி, ரூ.42,000-க்கு விற்பனையானது.
ஏப்ரல் முதல் ஜூலை வரை பஞ்சு விலை குறைந்ததால், நூற்பாலைகள் அதற்கேற்ப நூல் விலையையும் குறைத்தனர். ஆனால், ஆகஸ்ட் மாதம் முதல் தேதி மீண்டும் அதிரடியாக பஞ்சு விலை உயரத் தொடங்கியது. கடந்த 15 நாட்களில் ஒரு கண்டிக்கு ரூ.2 ஆயிரம் விலை உயர்ந்து, தற்போது ரூ.44,000-ஆக உயர்ந்து உள்ளது. இத்துடன் போக்குவரத்து செலவும் சேர்த்து, ஆலைக்கு வரும்போது ரூ.45,500 செலவாகிறது.
20-25% குறைந்த நூல் உற்பத்தி!
இந்த குறுகியகால விலை ஏற்ற, இறக்கங்களால் நூற்பாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 20 முதல் 25 சதவீதம் வரை நூல் உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும், நூற்பாலைகளில் இருப்பில் உள்ள நூலும் காலியாகும் தருவாயில் உள்ளது.
இந்த சூழ்நிலையைச் சமாளிக்க, நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. சில கவுன்ட் நூல்களின் விலை ஏற்கெனவே உயர்ந்துவிட்டது.
இது தொடர்பாக இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பிரபு தாமோதரன், நிர்வாகக் குழு உறுப்பினர் ரவீந்திரன் ஆகியோரிடம் பேசினோம்.
“இந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) அதிகம் உயர்த்தப்பட்டதால், இந்தியாவில் பருத்தி விலை தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால் பல நாடுகளில் பருத்தி விலை குறைந்தாலும், இந்தியாவில் விலை குறையவில்லை. இதனால், ஜவுளி ஏற்றுமதியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பருத்தியே விளையாத வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள், அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, ஏற்றுமதியை அதிகரித்துவிட்டது.
பருத்தி விளைச்சல் அதிகரிக்கப்படுமா?
குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது, குறுகியகாலத் தீர்வையே தரும். மேலும், மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி ஏற்றுமதியிலும் இது பாதிப்பை உண்டாக்கி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் தடுத்துவிடும். பருத்தி விளைச்சலை ஒரு ஹெக்டேருக்கு 1,000 கிலோவாக உயர்த்துவது, விவசாயிகளுக்கு நேரடி மானியம் கிடைக்கச் செய்வது போன்றவையே நீண்டகாலத் தீர்வைத் தரும். இதுபோன்ற மாற்று திட்டங்களே ஜவுளித் துறைக்கு புத்துயிரூட்டும்.
அமெரிக்காவில் ஹெக்டேருக்கு 960 கிலோவும், சீனாவில் 1,400 கிலோவும் பருத்தி விளையும்போது, இந்தியாவில் ஹெக்டேருக்கு சராசரியாக 480 கிலோ மட்டும் விளைவது குறிப்பிடத்தக்கது.
இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) மூலம் பருத்தியை சர்வதேச சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு வாங்காமல், மத்திய அரசு விவசாயிகளுக்கு நேரடியாக மானியங்களை வழங்கலாம்.
மேலும், பருத்தியை நேரடியாக ஏற்றுமதி செய்யாமல், ஆடையாக ஏற்றுமதி செய்வதுதான் ஒரு நாட்டின் பொருளாதார உயர்வுக்கும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் சிறந்த வழியாகும்.
ஒரு பருத்தி ஆண்டில், மிகக் குறுகிய காலத்தில் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள், பொருள் விற்பனையில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகின்றன. ஏற்கெனவே, நிதிச் சுமை உள்ளிட்ட பிரச்சினைகளால் தடுமாறும் நூற்பாலைகள், 15 நாட்களில் ஒரு கண்டி பருத்தி விலையில் ரூ.2 ஆயிரம் அதிகரித்துள்ளதால் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளன. கடந்த இரு மாதங்களில் 20 முதல் 25 சதவீதம் வரை நூல் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தற்போது நூல் தட்டுப்பாடு உருவாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவேதான்,
நூல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு நூற்பாலைகள் தள்ளப் பட்டுள்ளன” என்றார்.