தங்க நகைகள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்றது கோவை நகரம். அந்தக் காலத்திலேயே நெக்லஸ், வளையல், ஆரம் என பாரம்பரிய நகைகள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. கையால் செய்யப்பட்ட கோவை நகைகளுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு இருந்தது. ஒரு கட்டத்தில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் கோவையில் இருந்தனர். கோவையில் தயாரிக்கப்படும் நகைகள், நுணுக்கமான வேலைப்பாடுகளுக்குப் பெயர்பெற்றவை.
இந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளால் பொற்கொல்லர்களுக்கு வேலைவாய்ப்பு குறையத் தொடங்கியது. மேலும், பலர் தொழிலைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தங்க நகை உற்பத்தித் தொழில் சீரடையத் தொடங்கியது. தற்போது 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் கோவையில் இருக்கின்றனர். தங்க நகை தொழிலில் அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகத் தொடங்கியுள்ளன.இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த தங்க நகைத் தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை மற்றும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்த மகளிர்க்கு சான்றிதழ் வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், வங்கிகள் மற்றும் நகை அடமானக் கடைகளில், தங்கத்தை பரிசோதனை செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. அடமானம் வைக்க கொண்டுவரப்படும் தங்கம், தரம் உள்ளதுதானா என்பதை சோதிக்கவும் ஒவ்வொரு வங்கி மற்றும் அடகு நிறுவனத்தில் ‘அப்ரைசர்’ (மதிப்பீட்டாளர்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பணிக்காக கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களுக்கு மதிப்பீட்டாளர் பயிற்சியை இலவசமாக அளிக்கிறது கோவை பொற்கொல்லர்கள் கூட்டமைப்பு.
இதற்காக கோவை வைஸ்யாள் வீதி அருகேயுள்ள தர்மராஜா கோயில் தெருவில் தங்க நகை மதிப்பீட்டாளர் இலவச பயிற்சி மையத்தை இக்கூட்டமைப்பு அமைத்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களும், மத்திய வணிகம் மற்றும் தொழில் துறையின் கீழ் செயல்படும் ஜெம் ஜுவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் சார்பில், தங்க நகை தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாவும் கோவையில் நடைபெற்றது.
கோவை பொற்கொல்லர் கூட்டமைப்பு தலைவர் சி.என்.சீனிவாசன் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநர் எஸ்.எம்.கமலஹாசன் வரவேற்றார். எமரால்டு ஜுவல்லரி நிறுவன மேலாண் இயக்குநர் கே.சீனிவாசன், மத்திய அரசின் ஜெம் ஜுவல்லரி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் இயக்குநர் மித்திலேஷ் பாண்டே, உதவி இயக்குநர் சூர்ய நாராயணன் ஆகியோர் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இதில், மாவட்டத் தொழில்மையப் பொதுமேலாளர் ஆர்.கண்ணன், தேசிய சிறு தொழில் கழக முதுநிலை கிளை மேலாளர் ஜி.கண்ணன், மதுரை பொற்கொல்லர் அகாடமி நிர்வாக இயக்குநர் எஸ்.திருப்பதிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவை பொற்கொல்லர் கூட்டமைப்பு இணை மேலாண் இயக்குநர் டி.செந்தில்குமார் நன்றி கூறினார்.
இது தொடர்பாக கோவை பொற்கொல்லர் கூட்டமைப்பு மேலாண் இயக்குநர் எஸ்.எம்.கமலஹாசனிடம் பேசினோம். “இந்தியப் பொருளாதாரத்தில் தங்க நகை தயாரிப்புத் தொழில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. நாடு முழுவதும் ஏறத்தாழ 5 கோடி பொற்கொல்லர்கள் உள்ளனர். தேசிய அளவில் பொற்கொல்லர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் பெற இந்த அடையாள அட்டை பெரிதும் உதவும். இந்த நிலையில், மத்திய அரசின் ஜெம் ஜுவல்லரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மூலம் முதலில் கொல்கத்தாவிலும், தற்போது தமிழகத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அதேபோல, அடுத்த தலைமுறைக்கு தொழில்நுட்பத்தை கற்றுத்தர தங்க நகை தொழிற்பயிற்சிக் கூடம் அமைக்க வேண்டும். அனைத்து இயந்திரங்களுடன் கூடிய பொது பயன்பாட்டு மையம் அமைக்க வேண்டும். கோவையில் தங்க நகைப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தங்க நகை சுத்திகரிப்பு மையம்!
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் இந்து கோயில்கள் உள்ளன. இங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்க நகைகளை காணிக்கை செலுத்துகின்றனர். இவ்வாறு காணிக்கையாக செலுத்தப்படும் நகைகளை, பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு சென்று, உருக்கி, தங்கப் பாளமாக (பார்) மாற்றுகிறார்கள். இதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. எனவே, பொற்கொல்லர்கள் மிகுந்த கோவையில், தங்க நகை சுத்திகரிப்பு மையம் அமைக்க வேண்டும். இது பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.