தமிழகம்

மக்களவையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக எம்.பி.க்களில் வசந்தகுமார் முதலிடம்: ‘பிரைம் பாயின்ட்’ ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை

நடந்து முடிந்த மக்களவை கூட்டத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தமிழக எம்.பி.க் களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் (கன்னியாகுமரி) முதலிடத்தில் இருப்பதாக ‘பிரைம் பாயின்ட் பவுண்டேஷன்’ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ‘பிரைம் பாயின்ட் பவுண்டேஷன்’ தலைவர் கே.சீனிவாசன் கூறியதாவது:

17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த ஜூன் 17 முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 38 சட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 28 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறின. பிஆர்எஸ் இந்தியா அமைப்பு தொகுத்த தகவல்களின்படி, நடந்து முடிந்த மக்களவை கூட்டத் தொடரில் கட்சிகளும், எம்.பி.க்களும் எவ்வாறு பணியாற்றினர் என்பதை ‘பிரைம் பாயின்ட் பவுண்டேஷன்’ சார்பில் ஆய்வு செய்தோம். கட்சி சார்பிலான பங்களிப்பு, கேள்வி நேரம், நேரமில்லா நேரம், தனி நபர் மசோதாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தோம்.

எம்.பி.க்களின் செயல்பாடு களை பொறுத்தவரை மகா ராஷ்டிரா முதலிடத்திலும், கேரளா 2-வது இடத்திலும், தமிழகம் 13-வது இடத்திலும் உள்ளன. தமிழக எம்.பி.க்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார் (கன்னியாகுமரி) 14 விவாதங் கள், 2 தனி நபர் மசோதாக்கள், 56 கேள்விகள் என முதலிடம் வகிக்கிறார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் (தேனி), 29 விவாதங்களில் பங்கேற்ற தன் மூலம் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ்கனி (ராமநாதபுரம்) 2 தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறு ‘பிரைம் பாயின்ட்’ சீனிவாசன் கூறினார்.

SCROLL FOR NEXT