ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஒடிசா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஜெயபாலன்(37), மனைவி மாலவி கேசவனுடன்(35) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தையில்லா தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கினால் இது போன்ற துயரம் நிகழாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்.
குழந்தையின்மையைப் போக்க உலகத் தரம்வாய்ந்த சிகிச்சைகள் தற்போது உள்ளூரிலே கிடைக் கின்றன. இயற்கையான முறை யில் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள சிகிச் சைகள் உள்ளன. அப்படியிருந்தும் குழந்தையில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய உணவு கலாச் சாரம், வாழ்க்கை முறையால் நகர் பகுதியில் 20 சதவீதம் குடும் பங்களில் குழந்தை இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறு வனம் தெரிவிக்கிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை மகப்பேறு துறை பேராசிரியர் சுமதி கூறியதாவது: கர்ப்பப்பை பிரச்சினை, கருப்பையில் கட்டி, கருக்குழாயில் அடைப்பு போன்ற வையால் பாதிக்கப்பட்டு, குழந்தை பிறக்க முடியாத தம்பதிகளும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சிகிச்சைகள் தற்போது வந்துள்ளன.
குழந்தையில்லை என்று மனரீதியாக பாதிக்கப்படுவோரே விரக்தியில் தற்கொலை முடிவுக்குச் செல்கிறார்கள். ஒன்றிரண்டு ஆண்டுகள் வரை காத்திருப்போர் ஓரளவு மனரீதியாகப் பாதிக்கப் படுவதில்லை.
அதன்பிறகும் சிகிச்சை எடுத்து குழந்தையில்லாவிட்டால் அவர் கள் இனி குழந்தை பிறக்காது என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அப் போது, அவர்களுக்கு உற்றார், உறவினர்கள் ஆதரவாக இல்லாத போது தற்கொலை முடிவை எடுக்கின்றனர்.
இதைத் தடுக்க குழந்தையில்லா தம்பதிகள், மனநல சிகிச்சையும் எடுத்துக் கொள்வது அவசியம். அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் குழந்தை யின்மை தம்பதிகளுக்கு நாங் களே முடிந்த அளவு கவுன்சலிங் வழங்குவோம்.
குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு 90 சதவீதம் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அளிக்க முடியும். மீதமுள்ளவர்கள் கருப்பையில் விந்தணுவைச் செலுத்துதல், சோதனைக்குழாய் முறையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எடுத்தவுடனே இதுபோன்ற சிகிச்சைகளுக்குச் செல்ல வேண் டிய அவசியம் இல்லை. அதற்கு முன்பே காரணங்களைக் கண்ட றிந்து சிகிச்சைப் பெற்றாலே குழந்தை கிடைக்க அதிக வாய்ப் புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருநெல்வேலி அரசு மருத் துவக் கல்லூரி மனநலத் துறை உதவிப் பேராசிரியர் ஆ.காட்சன் கூறும்போது, ‘‘15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் நம்பிக்கையுடன் முயற்சி செய்து குழந்தை பெறும் தம்பதிகளும் இருக்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் தொடர்ந்து இன்னும் குழந்தையில்லையா? என்று கேட்பது இவர்களுக்கு அவமானத்தையும், நெருக்கடி யையும் ஏற்படுத்தும்.
சமூகத்தில் தற்போது குழந்தையில்லை என்பது தாய்மை, ஆண்மைக்குச் சவாலாக கருதப்படுகிறது. தற்கொலை முடிவெடுப்பவர்கள், குறிப்பிட்ட முயற்சிக்குப் பிறகு இந்த சவாலில் தோற்றுப்போய்விட்டதாகக் கருதி விடுகிறார்கள்.
அதனால், குழந்தையில்லாத தம்பதிகள் கண்டிப்பாக சிகிச்சையுடன் மனநல மருத் துவர்களை அணுகி கவுன்சலிங் பெறுவதும் அவசியம்’’ என்றார்.