மதுரை,
மீன் பிடிக்கச் சென்று கடலில் மூழ்கி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவரின் மனைவி ரூ.20 லட்சம் இழப்பீடு மற்றும் அரசு வேலை கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எஸ்.ஞானசவுந்தரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
"என் கணவர் சிந்தாஸ், மீன் பிடித் தொழில் செய்து வந்தார். அவரது வருமானத்தை நம்பியே எங்கள் குடும்பம் இருந்தது. என் கணவர் உட்பட 4 பேர் 4.7.2019-ல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மறுநாள் காலை அவர்கள் கரைக்குத் திரும்பியிருக்க வேண்டும். கரை திரும்பாததால் மீன்வளத்துறை, கடலோரக் காவல்படையிடம் புகார் அளித்தோம். இருப்பினும் என் கணவர் உட்பட காணாமல்போன மீனவர்களைத் தேட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் என் கணவரின் உடல் திருவாரூர் முத்துப்பேட்டை கடற்கரையில் 12.7.2019-ல் கண்டெடுக்கப்பட்டது. என் கணவருடன் மீன் பிடிக்கச் சென்ற ஸ்டீபன், அந்தோணி ஆகியோர் புதுக்கோட்டை நெம்புதாழையில் உயிருடன் மீட்கப்பட்டனர்.
என் கணவர் புயலால் கடலில் மூழ்கிய படகின் விளிம்புகளைப் பிடித்தபடி நான்கு நாட்கள் உயிருடன் இருந்துள்ளார். அதன் பிறகே உயிரிழந்துள்ளார். நாங்கள் புகார் அளித்த உடனே கடலோரக் காவல்படையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் கணவரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது இயற்கை இடர்ப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடும் மீனவர்களை மீட்க தமிழக கடலோரக் காவல்படையில் போதுமான படகு, விமானம் மற்றும் நவீன உபகரணங்கள் இல்லை.
என் கணவர் இறப்புக்கு அதிகாரிகள் தான் காரணம். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்ததால் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடுகிறோம். எனவே முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.20 லட்சம் இழப்பீடு மற்றும் எனக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட வேண்டும்".
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ரஜினி வாதிட்டார்.
மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.