தமிழகம்

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை கலைப்பு; இனி அதிமுகவுடன் இணைந்து செயல்பட முடிவு: ஜெ.தீபா அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை,

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகளான தீபா ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தார். ஆனால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைப்புக்குப் பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார். சில தினங்களிலேயே அவரின் கணவர் மாதவனும் போட்டியாக ஓர் அமைப்பைத் தொடங்கினார்.

இவர்களின் அரசியல் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகின. குறிப்பாக போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில் தீபாவும், அவரது சகோதரர் தீபக்கும் சண்டையிட்டுக் கொண்ட பிறகு தீபாவின் அரசியல் பாணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் மாதவனுக்கும் - தீபாவுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் ஊடகங்களில் செய்தியாகின. இந்நிலையில், தீபா, மாதவனின் அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டன.

அதன் பின்னர் கட்சி குறித்த எந்த சலசலப்பும் செய்தியும் இல்லாது இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் குடும்பத்தைக் கவனிக்க இருப்பதால் தீபா பேரவையைக் கலைக்க இருப்பதாக அறிவித்தார். அப்போதே அதிமுகவுடன் இணைப்பா என்ற கேள்விகள் எழுப்பின.

இந்நிலையில், இன்று அதிமுகவுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, "ஜெயலலிதா மறைவுக்குப் பின் அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர். பல சோதனைகளைத் தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன்.

உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டேன். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய்க்கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதிமுகவில் எந்தப் பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை. போயஸ் இல்லத்தை மீட்பதில் சட்டரீதியான நடவடிக்கை தொடரும்" என்றார்.

SCROLL FOR NEXT