தமிழகம்

அடுத்த 50 ஆண்டுகளில் நிலவும், செவ்வாயும் மனிதர்கள் வாழும் இடமாக மாறும்: மயில்சாமி அண்ணாதுரை 

செய்திப்பிரிவு

கோவை,

அடுத்த 50 ஆண்டுகளில் நிலவும், செவ்வாயும் மனிதர்கள் வாழும் இடமாக மாறும் என்று இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ஜிஎஸ் எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதன்பின், சந்திரயான் சுற்றுப் பாதை படிப்படியாக 5 முறை மாற்றப்பட்டு பூமிக்கும் விண்கலத்துக்குமான தூரம் அதிகரிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி சந்திரயான், பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் 6 நாட்கள் பயணத்துக்குப் பின் நிலவுக்கு அருகே சந்திரயான் நாளை காலை 8 மணியளவில் (ஆகஸ்ட் 20) சென்றடைய உள்ளது.

இந்நிலையில் கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி விழாவில் இன்று பங்குகொண்ட இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான் நிலவை அடைவதை இந்தியாவின் 130 கோடி மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல உலக நாடுளும் எதிர்பார்க்கின்றன.

நிலவும் செவ்வாயும் பூமியின் இன்னொரு தளமாக இருப்பதற்காக வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க கண்டத்தில் புதிதாக மனிதர்கள் எப்படி வந்தார்களோ, அதேபோல நிலவும் செவ்வாயும் விரைவில் பூமி வாழ் மனிதர்களின் பகுதியாக மாறுதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது நிறைவேற 50, 60 ஆண்டுகாலம் பிடிக்கும்'' என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

SCROLL FOR NEXT