தமிழகம்

டார்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி பழுது பார்ப்பதற்காக யுஎஸ் அனுப்பப்பட்டது

செய்திப்பிரிவு

விபத்துக்குள்ளான டார்னியர் விமானத்தின் கருப்புப் பெட்டி பழுது பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘டார்னியர்’ விமானம் கடந்த மாதம் 8-ம் தேதி காணாமல் போனது. 35 நாட்கள் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு இம்மாதம் 10-ம் தேதி விமானத்தின் கருப்புப் பெட்டியும், 13-ம் தேதி மனிதர்களின் உடல் எலும்புத் துண்டுகள், வாட்ச் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் ஆகியவையும் பிச்சாவரம் கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன.

தேடுதல் வேட்டையின்போது கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புத் துண்டுகள் விமானத்தில் பயணம் செய்த விமானிகளுடையதா என்பதைக் கண்டுபிடிக்க தடயவியல் பரிசோதனை நடத்த கடலோர காவல் படை முடிவு செய்துள்ளது. இதற்காக டிஎன்ஏ சோதனை நடத்த விமானிகளின் பெற் றோர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் கருப்புப் பெட்டியில் விமானம் விபத்துக்குள்ளான சமயத்தில் நிகழ்ந்த விமானி களின் உரையாடல்கள் பதிவை வைத்து விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த விபத்தில் கருப்புப் பெட்டி சேதம் அடைந்துள்ளதால் அதில் இருந்து தகவல்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சேதம் அடைந்துள்ள கருப்புப் பெட்டி பழுது பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து, கடலோர காவல்படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேதம் அடைந்துள்ள விமானத்தின் கருப்புப் பெட்டியை பழுது பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு வாரமாகும்

அங்கு விஞ்ஞானிகள் சேதம் அடைந்த கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து பழுதை சரி செய்வர். அதன் பிறகு, அதில் பதிவாகி உள்ள தகவல்களை பெற முடியும் என கருதப்படுகிறது. இப்பணிகள் முடிய இன்னும் ஒருவார காலம் ஆகும். அதன் பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும்’’ என்றார்.

SCROLL FOR NEXT