தமிழகம்

பால் விலை உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையிலேயே தெரிவித்தேன்: முதல்வர் பழனிசாமி விளக்கம்

செய்திப்பிரிவு

சேலம்:

பால் விலை உயர்த்தப்படும் என்று தான் ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்ததுதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிறு) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

பால்விலை உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையிலேயே நான் தெரிவித்திருந்தேன், உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது.

அப்போதே பால் கொள்முதல் விலை அதிகரிக்கப்படும் அதே வேளையில் விற்பனை விலையும் உயர்த்தப்படும் என்று நான் தெரிவித்தேன். பால் உற்பத்தியாளர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். அவர்களைச் சந்தித்துப் பேசிய போது கால்நடை வளர்ப்புப் பராமரிப்புச் செலவு கூடுதலாகியிருக்கிறது, பால் கொள்முதல் விலையை உயர்த்தி 5 ஆண்டுகாலம் ஆகிறது இடைப்பட்ட 5 ஆண்டு காலத்தில் தீவன விலையேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதிக கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

விற்பனை விலையும் கொள்முதல் விலையும் கணக்கிட்டு அரசு பசும்பாலுக்கு 4 ரூபாயும், எருமைப்பாலுக்கு 6 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது. பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கூறுவதைப் பார்க்கும்போது பலதும் நஷ்டத்தில் இயங்குகிறது என்கின்றனர். சில டைரிதான் லாபத்தில் இயங்குகிறதே தவிர பெரும்பாலான பால் கூட்டுறவு ஒன்றியங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது.

இருந்தாலும் அரசு இதையெல்லாம் சமாளித்து இன்றைக்கு சுமார் 4, 60,000 பால் உற்பத்தியாளர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இது மட்டுமல்லாமல் போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்திருக்கின்றன, பாலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் கட்டணங்கள் உயர்ந்திருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

5 ஆண்டுகள் ஆகிறது, இந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் வருவாயும் அதிகரித்திருக்குமே. சம்பள விகிதம் உயர்ந்திருக்கிறது, தொழிலாளர்களுக்கும் கூலி விகிதம் உயர்ந்திருக்கிறது. எல்லாருக்கும் உயர்வு இருக்கும் போது பால் உற்பத்தியாளர்களுக்கும் உயர்த்திதானே கொடுக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு என்பது இப்போது சுலபமல்ல, நோய்வாய்ப்பட்டால் அதற்குச் செலவு செய்ய வேண்டியுள்ளது, நோய் தாக்கும் போது பால் உற்பத்தி குறைந்து விடுகிறது.

இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் அரசு தீவிரவாக பரிசீலித்து விலையை உயர்த்தியிருக்கிறது.

இவ்வாறு கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

SCROLL FOR NEXT