தமிழகம்

2016 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமையும்: இளங்கோவன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமையும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போராயர் எஸ்றா சற்குணத்தின் 77-வது பிறந்தநாள் விழா, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

பேராயர் எஸ்றா சற்குணம் பேசும்போது, ‘‘மத்தியில் மதவாத சக்திகளின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் நமக்கு சாதகமான ஆட்சி இல்லை. எனவே, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட இங்கு வந்துள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

2004-ல் கருணாநிதி தலைமையில் அமைந்த கூட்டணி 100 சதவீத வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற கூட்டணி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அமைய வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எது வேண்டுமானாலும் ஆட்சி அமைந்த பிறகு கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்றார்.

இளங்கோவன் பேசும்போது, ‘‘எஸ்றா சற்குணம் எடுத்த முயற்சியால் 2004 மக்களவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றது. அதுபோல வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றிக் கூட்டணி உருவாக அவர் முயற்சி எடுத்து வருகிறார். அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.

திருமாவளவன் பேசும்போது, ‘‘கருணாநிதி தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்றே எஸ்றா சற்குணம் விரும்புவார். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனாலும் பேராயரின் பிரார்த்தனை வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

இறுதியாக பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘பேராயர் எஸ்றா சற்குணம் என் மீது மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். அவரது பணிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்’’ என்றார்.

2016 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் கூட்டணி குறித்து ஒரே மேடையில் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT