தாயு.செந்தில்குமார்
நாகப்பட்டினம்
அபிராமி பட்டர் வாழ்ந்த இடத்தில் தமிழக அரசு வெண்கல சிலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் அமாவாசை நாளில் பூம்புகார் கடலில் நீராடிவிட்டு தரங்கம்பாடியை அடுத்துள்ள திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்குச் சென்றபோது, அங்கு அம்மனை தரிசனம் செய்து கொண்டிருந்த அபிராமி பட்டர், மன்னரை கவனிக்கவில்லை.
அபிராமி பட்டர், அபிராமி அம்மனின் மிகச் சிறந்த பக்தர் என்று அறிந்துகொண்ட மன்னர், அவரிடம் சென்று இன்றைக்கு என்ன திதி என்று கேட்க, இன்று பவுர்ணமி திதி என்று அபிராமி பட்டர் கூறினார். அமாவாசை திதி என்பதால் பூம்புகார் சென்று கடலில் நீராடிவிட்டு வருகிறேன், நீங்களோ பவுர்ணமி திதி என்கிறீர்களே. இன்று இரவு பவுர்ணமி நிலவு வராவிட்டால் உங்களை வேள்வியில் தள்ளி விடுவேன் என்று மன்னர் கோபத்துடன் கூறினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியை பாடினார். இறுதிப் பாடலை பாடும்போது, அவர் முன் தோன்றிய அபிராமி அம்மன், தன் காதில் அணிந்திருந்த தோட்டைக் கழற்றி வானத்தில் வீச அந்தத் தோடு பவுர்ணமி நிலவாக மாறியது. இதைப் பார்த்து திகைத்த சரபோஜி மன்னர், அவரது பக்தியைக் கண்டு வியந்து திருக்கடையூர் மேல மடவிளாகத்தில் உள்ள அபிராமி பட்டர் வசித்து வந்த வீட்டை அவருக்கு மானியமாக செப்புத் தகட்டில் எழுதி கொடுத்தார் என்பது வரலாறு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அபிராமி பட்டர் வாழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள சத்திரத்தில் அவருக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, சங்கரன்பந்தல் ஏரவாஞ்சேரியைச் சேர்ந்த தமிழ்நாடு சிறு கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவையின் மாநிலச் செயலாளர் அழகிரிசாமி கூறியதாவது:
6 ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பணியாற்றி வரும் சிவாச்சாரியார் ஒருவர் அபிராமி பட்டர் வாழ்ந்த இடத்தில், சஷ்டியப்த பூர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடத்த வரும் தம்பதியினரின் உறவினர்களுக்கு உணவிடுவதற்காக சத்திரம் ஒன்றைக் கட்டியுள்ளார்.
அந்த சத்திரத்தில் ஒரு சிறு இடம் ஒதுக்கி, அபிராமி பட்டருக்கு வெண்கலச் சிலையை வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.