தமிழகம்

நீலகிரி மக்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள்: திமுக சார்பில் ஸ்டாலின் அனுப்பினார் 

செய்திப்பிரிவு

சென்னை,

மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,500 அரிசி மூட்டைகள் அடங்கிய மூன்று லாரிகளை திமுக தலைவர் ஸ்டாலின் நீலகிரிக்கு அனுப்பி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு தொடக்கத்தில் சரிவர பெய்யாத நிலையில், கடந்த ஒரு வாரமாகத் தீவிரமடைந்தது. இடைவிடாமல் பெய்து வருவதால், 1௦ ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரியில் அதிக அளவு மழை பதிவானது. தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம் பெரும் சேதத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கனமழையிலும் - நிலச்சரிவிலும் சிக்கி பேரிடருக்கு உள்ளாகியிருக்கும் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் பொருட்டு, அம்மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக நிர்வாகிகளும் - தொண்டர்களும் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு வேண்டிய பல்வேறு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திட வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி இன்று காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான 1,500 மூட்டை அரிசி அடங்கிய மூன்று லாரி நிவாரணப் பொருட்களை கடும்மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்திற்கு, ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். அத்துடன் சென்னை மேற்கு மாவட்டம், மயிலாப்பூர் பகுதி முன்னாள் செயலாளர் ந.சம்பந்தம் அவர்களின் மைத்துனர் ஏழுமலை அளித்த 100 மூட்டை அரிசியையும் அனுப்பி வைத்தார்.

முன்னதாக, நீலகிரியில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக, திமுக எம்எல்ஏ, எம்.பி.க்கள் நிதியிலிருந்து ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT