தமிழகம்

அத்திவரதர் உண்டியல் காணிக்கை எவ்வளவு?- காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்

அத்திவரதர் உண்டியல் காணிக்கை எவ்வளவு என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தகவல் அளித்துள்ளார்.

கடந்த 47 நாட்களாக நடைபெற்ற காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தைச் சிறப்பாக நிறைவுசெய்து கொடுத்த அத்தனை அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அலுவலர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் நன்றி.

அத்திவரதருக்கான உண்டியல் காணிக்கையில் இதுவரை 7 கோடி ரூபாயை எண்ணி முடித்துள்ளோம். மீதமுள்ள பணத்தை எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முழுமையாக எண்ணிய பிறகு இறுதிக்கட்டத்தில் காணிக்கை விவரங்களைத் தெரிவிப்போம்.

தற்காலிகக் கூடங்கள், வரிசையில் நிற்கப் பந்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தடுப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் திரும்பப் பெறப்படும். இதற்கான அறிக்கையைத் திட்டக்குழு சமர்ப்பித்துள்ளது. இதற்காகத் துப்புரவுப் பணியாளர்கள் இன்னும் இரண்டு தினங்கள் இங்கே தங்கியிருந்து பணியை முழுமையாக முடிப்பார்கள். அதற்குள்
அனைத்துத் துப்புரவுப் பணிகளும் நிறைவுபெற்று விடும்.

அடுத்த 15 நாட்களுக்குள் சாலைகளும் மறுசீரமைக்கப்படும். தினந்தோறும் சராசரியாக 25 டன் குப்பைகள் கோயில் வளாகத்தில் சேர்ந்தன. அவையனைத்தும் முறையாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. அவை மறுசுழற்சி முறைக்கு உள்ளாக்கப்படும்.

அதேபோல காலணிகளும் முறையாகப் பிரித்து அடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பகுதி அனாதை ஆசிரமங்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ளவை காஞ்சிபுரம் நகராட்சியால் ஏலம் விடப்படும்.

கோயில் பணிகளில் ஈடுபட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். அத்திவரதர் சயனிக்கும் அனந்தசரஸ் திருக்குளத்தைச் சுற்றியுள்ள க்ரில் கம்பிகளை உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 1 அல்லது 2 மாதங்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பும் குளத்துக்கு வழங்கப்படும்''.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT