வேலூர்,
வேலூர் தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் திமுக சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பாக கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 9-ம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கதிர் ஆனந்த் 4.85,340 வாக்குகளைப் பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,119 வாக்குகளைப் பெற்றார்.
இந்நிலையில் கதிர் ஆனந்தை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாணியம்பாடியில் திமுகவின் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மழையின் காரணமாக பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 25-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்த தொகுதியின் வாக்காளர்களுக்கு
நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் வாணியம்பாடியில் நாளை (18.08.2019) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மாபெரும் பொதுக்கூட்டம் தொடர் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 25.08.2019 அன்று வாணியம்பாடியில் மாலை 4 மணியளவில் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.