பள்ளிக்கரணையில் அரசுக்குச் சொந்தமான 66 ஏக்கர் நிலம் தனியார் அறக்கட்டளைக்கு ஒரே ஆவணமாக பதிவு செய்தது தொடர்பான வழக்கில், பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி. எஸ்.முருகையா உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
சென்னை அருகே பள்ளிக் கரணையில் அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் நிலம், அறக்கட்டளை யொன்றுக்கு ஒரேநாளில் ஒரு ஏக்கர் ஒரு லட்சம் என்ற மதிப்பீட்டில் ஒரே ஆவணமாக ராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த நில விற்பனை தொடர்பாக சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு தொடர்ந்ததையடுத்து அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமணன் மற்றும் அழகிரி ஆகியோர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்கண்ட நில விற்பனை தொடர்பாக பத்திரப்பதிவுத் துறைத் தலைவர், மத்திய குற்றப்பிரிவு (நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு-2) காவல் உதவி ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “பள்ளிக்கரணையில் அரசுக்கு சொந்தமான 66 ஏக்கர் நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு செய்யப்படாததால், அருகில் உள்ள கட்டிடத்தின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது. இப்பதிவில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்,
பள்ளிக்கரணையில் அரசு நிலம் ஐந்து அல்லது பத்து சென்ட் நிலம் குறைந்த விலையில் பத்திரப் பதிவு செய்யப்படவில்லை. ஒரே நேரத்தில் ஒரே ஆவணமாக 66 ஏக்கர் நிலம் தனியார் அறக்கட்டளைக்கு ஏக்கர் ஒரு லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு பத்திரப்பதிவுத் துறை உயர் அதிகாரி, இந்த நிலத்தை வாங்குபவர் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ளாரா, இல்லையா என்று சரிபார்த்திருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவில்லை.
இப்போதுள்ள நிலையில், பள்ளிக்கரணையில் ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சம் என்று விலை நிர்ணயித்திருப்பதை கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. ஒரு இடத்துக்கு வழிகாட்டி மதிப்பீடு இல்லை என்றால், அருகில் உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பீடு அடிப்படையில் பத்திரப்பதிவு செய்ய முடியாது. இதன்படி பார்க்கும்போது, அரசின் 66 ஏக்கர் நிலம் பத்திரப் பதிவு செய்தது மர்மமாக இருக்கிறது. எந்த சட்டத்தின் அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., ஜூன் 30 ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன் முன்பு பத்திரப்பதிவுத் துறை கூடுதல் ஐ.ஜி. ஆஜரானதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையின் போது பத்திரப்பதிவு ஐ.ஜி.தான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி, நீதிபதி கிருபாகரன் முன்பு பத்திரப்பதிவு ஐ.ஜி. எஸ். முருகையா நேற்று ஆஜரானார். அவர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதிடுகையில், இந்த விவகாரத்தில் பத்திரப் பதிவுத்துறையின் சார் பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சார் பதிவாளர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு (நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப் பிரிவு-2) காவல் உதவி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.யின் தனி அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது நீதிபதி என்.கிருபாகரன் கூறுகையில், அறக்கட்டளைகள் எப்படி தொடங்கப்படுகின்றன? அதற்கு பணம் எப்படி வருகின்றன? சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தையும் அறக்கட்டளை தொடங்கப் பயன்படுத்துகிறார்களா? விளை நிலங்களில் கல்வி நிறுவனங்களுக்காக கட்டிடம் கட்டுதல் போன்ற காரணங்களால் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே போகிறது. இதெல்லாம் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. அதுதொடர்பான கேள்விகளுடன் வரும் திங்கள்கிழமை உத்தரவிடுகிறேன் என்றார் நீதிபதி.