தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி பெருவிழா கோலாகலம்

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் ஆடிப் பெருந்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பிரசித்திபெற்ற மாரியம்மன் திருக்கோயில்களில் ஒன்று சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோயில். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயில்களில் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்றி ஆடித்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

அதையொட்டி, ஆடித் திருவிழா கடந்த 9-ம் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆடிப் பெருந் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், முளைப்பாரி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவிழாவையொட்டி அம்மனுக்கு இன்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அம்மன் பிறந்த இடமாகக் கருதப்படும் கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வால்பாறை கடந்து திருக்கோயிலுக்கு அம்மன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்க 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை கோயில் நிர்வாகம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

SCROLL FOR NEXT