சிம்லாவில் நடந்த சுகாதாரத்துறை மாநாட்டில் இந்திய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பாக செயல்பட்ட தமிழகத்துக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் இந்திய அளவில் ஒரு வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்தல், பொது சுகாதார முறைகளை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பான தேசிய மாநாடு சிம்லாவில் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடந்தது.
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி, இணை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பொது சுகாதார முறைகளை சிறப்பாக செயல்படுத்தி, ஒரு வயது முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைத்துள்ள தமிழகத்தின் சிறப்பான செயல் பாடுகளை பாராட்டி முதல் பரிசு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சுகாதாரம் மற் றும் தாய் சேய் நலனில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மிகவும் சிறப்பாக உள்ளது. தினமும் 1,800-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று, ஆண்டுக்கு சுமார் 6.8 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அந்த குழந்தைகளை மிகச் சிறப்பாக பராமரிக்க தேவையான அனைத்து மருத்துவ வசதி களும் அரசு மருத்துவ மனைகளில் இருக்கின்றன. பொதுமக்கள் பிரசவத்துக்காக அரசு மருத்துவ மனைகளுக்கு செல்கின்றனர்.
அதனால் இந்தியாவிலேயே மிக அதிகப்படியான பிரசவங்கள் தமிழக அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அது மட்டு மின்றி தனியார் மருத்துவமனை களில் பிரசவம் முடிந்து அவர் களால் காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள பச்சிளம் குழந்தைகளும் அரசு மருத் துவமனைகளில் அனுமதிக்கப் பட்டு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இதனால் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் தொடர்ந்து வெகுவாக குறைந்து வருகிறது என்று கூறி மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.