காஞ்சிபுரம்
அத்திவரதர் வைபவத்தில் பொது தரிசனம் இன்றுடன் (ஆக. 16) நிறைவு பெறுகிறது. எனவே நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அத்திவரதரை தரிசிக்கச் சாலைகளில் காத்திருந்தனர். விஐபி தரிசனத்திலும் பெருமளவு கூட்டம் திரண்டதால் காலை 10.30 மணிக்கே அதன் நுழைவு வாயில் மூடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 80 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ள நிலையில் நேற்று 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் திரண்டனர். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு கிழக்கு கோபுரம் மூடப்பட்டது. அதன் பின்னர் கோபுரத்துக்குள் உள்ள பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆடி கருடசேவையை முன் னிட்டு நண்பகல் 12 மணியுடன் கிழக்கு கோபுரக் கதவு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் இரவு சென்றவர்கள் தரிசித்து முடித்து விட்டு வெளியே வருவதற்குள் மறுநாள் தரிசனத்துக்கு பொது மக்கள் லட்சக்கணக்கில் திரண்டு வரிசையில் காத்திருந்தனர். இத னால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் டி.கே.நம்பி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவு பக்தர்கள் கூட்டம் இருந்தது. 4 மாட வீதிகளும் அதிகாலையிலேயே நிரம்பி இருந்தன. அத்திவரதர் நேற்று புஷ்பாங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விஐபி வரிசை
காஞ்சிபுரத்தில் முக்கிய பிரமுகர் கள் மற்றும் மிக முக்கிய பிரமுகர்கள் தரிசனம் நண்பகல் 12 மணியுடன் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதனால் அதிகாலையிலேயே செட்டித் தெரு, ரங்கராஜ வீதி சந்திப்பில் பக்தர்கள் கூடினர். இதனால் அப்பகுதிகள் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சி அளித்தன. கையில் அனுமதிச் சீட்டு வைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியாமல் பலர் தவித்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் காலையில் 10.30 மணிக்கு போலீஸார் அறிவிப்பை வெளியிட்டனர். ‘ஏற்கெனவே உள்ளே சென்றவர்கள் தரிசித்து முடிப்பதற்கே 2 மணியை தாண்டி விடும். எனவே இனி பக்தர்களை அனுமதிக்க முடியாது' என்று அறிவித்தனர்.
இதனால் கூச்சல் குழப் பம் ஏற்பட்டது. பின்னர் அதிகள் வில் பக்தர்கள் காத்திருப்பதால் இரவு 8 மணிக்கு பிறகு அனுப்பு வதாகவும், முதியோர் அவர் களுக்கென்று தனியாக உள்ள வரிசையில் செல்லும்படியும் போலீஸார் அறிவுறுத்தினர்.
அப்போது அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் ஒரு சிறுவனை அவனது பெற்றோர் தவற விட்டுவிட அந்த சிறுவனை பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும்படி போலீஸார் அறிவிப்பு செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் வரை அமைதியாக இருந்த சிறுவன் பெற்றோர் வராததால் தேம்பி அழ ஆரம்பிக்க போலீஸார் அவனை சமாதானப்படுத்த முடியாமல் திணறினர்.
வெறிச்சோடிய பொது தரிசனம்
பொது தரிசனத்துக்கு அதி காலையில் இருந்து அதிக மக்கள் வந்தாலும், ‘நண்பகல் 12 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படும். அதன் பிறகு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று அறிவிக்கப்பட்டதால் கூட்டம் குறையத் தொடங்கியது. இதனால் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட தங்கும் இடங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வரிசையில் மட்டுமே சிலர் காத்திருந்தனர். நண்பகல் 12 மணியை தாண்டியும் கிழக்கு கோபுரத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோபுரத்துக்குள் சென்றவர்கள் மாலை 4 மணிவரை அத்திவரதரை தரிசனம் செய்தனர்.