சேலம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று பிற்பகல் விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 111.4 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 80.41 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 12-ம் தேதி 3 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், மேட்டூர் அணைக்கு 2.40 லட்சம் கன அடி நீர்வரத்து இருந்தது. திடீரென கேரள, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், கர்நாடக மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இதையடுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. நேற்று முன்தினம் பிற்பகல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், அன்று இரவு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது, மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 107.75 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை 111.4 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 80.41 டிஎம்சியாக அதிகரித்தது. எனினும், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கான நீர் வரத்து 40 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.