தமிழகம்

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நூல் அறிமுக விழா

செய்திப்பிரிவு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய ‘கடந்த நிலை’ நூலின் சிறப்பு அறிமுக விழா சென்னையில் நடந்தது.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தனது ஆன்மீக அனுபவங்கள் தொடர்பான நிகழ்வுகளை தொகுத்து ‘ட்ரான்செடன்ஸ்’ என்னும் நூலினை எழுதியுள்ளார். இந்த நூலை பிரதமர் மோடி கடந்த மாதம் டெல்லியில் வெளியிட்டார்.

டெல்லி அக்‌ஷர்தாம் கோயிலில் தனக்கும் குரு பிரமுக் சுவாமிக்கும் இடையே ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து அப்துல் கலாம் இந்த நூலினை எழுதியுள்ளார். தமிழில் இந்த நூல் ‘கடந்த நிலை’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. நூல் குறித்த சிறப்பு அறிமுக நிகழ்ச்சி சென்னை எம்.ஆர்.சி. நகரில் நேற்று முன் தினம் நடந்தது. அப்துல் கலாம் எழுதிய அந்த புத்தகம் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே அப்துல் கலாமுக்கும் குரு பிரமுக் சுவாமிக்கும் இடையேயான 14 ஆண்டு கால அனுபவங்கள் குறித்து பிரம்ம விஹாரி சுவாமிகள் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின்போது புத்தகத்தின் இணை ஆசிரியர் அருண் திவாரி பேசியதாவது:

பல ஆண்டுகளாக அப்துல் கலாமுடன் பணியாற்றுகிறேன். அவரை குருவாகவும், வழிகாட்டி யாகவும் ஏற்று வாழ்கிறேன். இதற்கு முன்பு அப்துல் கலாமுக் காக புத்தகங்கள் எழுதிய போது, மிக எளிமையாக எழுதி முடித்தேன். ஆனால் இந்த புத்தகத்தை என்னால் எழுதவே முடியவில்லை. பிறகு நேரே கோவிலுக்கு சென்று குரு பிரமுக் சுவாமியிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்த பிறகு என்னை அறியாமலேயே நான் அதை எழுதி முடித்தேன். நான் ஒரு அருமையான பணியை செய்திருப்பதாக அவர் பாராட்டினார்.

எனது அடுத்தகட்ட திட்டம், இந்த புத்தகத்தை நாடு முழுவதும் உள்ள குழந்தைகளிடம் சென்று சேர்ப்பதும். அவர்களுடன் மீதமுள்ள எனது நேரத்தை செலவழிப்பதும்தான். இந்த புத்தகம் மிக முக்கியமான ஒன்றாக கொண்டாடப்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், நல்லி குப்புசாமி செட்டி, ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தின் தலைமை அதிகாரி (இந்தியா) பி.எம்.சுகுமார் உள்ளிட்டோர் புத்தகம் குறித்து வாழ்த்தி பேசினார்.

SCROLL FOR NEXT