கே.சுரேஷ்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நூலகம் அமைப்பதற்காக மூடப்பட்டுள்ள அரசு தொடக்கப் பள்ளியை மீண்டும் திறக்கச் செய்வதற்காக கிராம பெண்கள் களம் இறங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட குளத்தூர் மற்றும் சின்னப்பட்டமங்கலம் ஆகிய அரசு தொடக்கப் பள்ளிகள் உட்பட தமிழகத்தில் குறைந்த மாணவர்களே பயின்ற 46 அரசு தொடக்கப் பள்ளிகளை மூடிவிட்டு நூலகம் திறக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், குளத்தூரில் ஒரு மாணவரே பயின்ற அரசு தொடக்கப் பள்ளி கடந்த 10-ம் தேதி மூடப்பட்டது. இதையடுத்து, ஊர் மக்கள் அனைவரும் ஆலோசித்து முடிவெடுத்ததன்படி, உள்ளூரில் இருந்து பிற பள்ளிகளுக்குச் சென்ற ஒரு தனியார் பள்ளி மாணவர் உட்பட 11 மாணவர்களை பெற்றோரே அழைத்து வந்து, மூடப்பட்ட பள்ளியை நேற்று முன்தினம் திறக்கச் செய்தனர்.
இதேபோல, சின்னப்பட்டமங் கலம் அரசுப் பள்ளியும் மாணவர்களே வரவில்லை எனக் கூறி பூட்டப்பட்டு, நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி, நூலகத்துக்கான பெயர்ப் பலகையை பள்ளியின் வெளிப்புறத்தில் பொருத்தவிடாமல் தடுத்துவிட்டனர்.
தொடர்ந்து, பள்ளி அருகே உள்ள தேவாலயத்தில் ஊர்த் தலைவர் தோமாஸ் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், மீண்டும் பள்ளியைத் திறக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கிராம மக்கள் கூறியது: சின்னப்பட்டமங்கலம், பெரியபட்டமங்கலம், கொத்தமங் கலம், நல்லிகுடி உள்ளிட்ட கிராமங்களில் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இந்தப் பள்ளியில் பயின்று வந்தனர். 1971-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்விழா கொண்டாடப்பட்டது. இங்கு படித்த ஏராளமானோர் பல்வேறு உயர் பொறுப்புகளில் உள்ளனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையாவும் இங்குதான் பயின்றார்.
4 ஆசிரியர்களுடன் சிறப்பாக நடைபெற்று வந்த இப்பள்ளி, நாளடைவில் ஓராசிரியர் பள்ளியாக சுருங்கி, மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு பள்ளியில் இறுதியாக பணியாற்றிய ஆசிரியரே காரணம்.
பள்ளிக்கு வந்துகொண்டிருந்த மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, நெருக்கடி கொடுத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி விட்டார். புதிய மாணவர்களையும் சேர்க்க மறுத்துவிட்டார். அடிக்கடி அவர் பள்ளிக்கு வருவதில்லை. யாரிடம் முறையிடுவதென்றே தெரியாத விரக்தியில்தான், அனை வரும் தங்களின் பிள்ளைகளை வெவ்வேறு பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியில் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள். இங்கு விவசாயத்தைத் தவிர வேறு வாழ்வாதாரம் கிடையாது. மழையின்றி விவசாயமும் பொய்த் ததால், பொதுமக்கள் பொருளா தார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து படிக்க வைக்க முடியாது. எனவே, மூடிய பள்ளியைத் திறக்க வேண்டும். முதற்கட்டமாக 11 மாணவர்களை சேர்க்க தயாராக உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து ஆவுடையார் கோவில் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனுவையும் கிராம மக்கள் அளித்தனர். மேலும், “ஓரிரு தினங்களில் பள்ளியைத் திறக்காவிட்டால், அடுத்தகட்ட நட வடிக்கையில் ஈடுபட ஆலோசித்து உள்ளோம்” என அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர்.