தமிழகம்

தாமிரபரணி - கருமேனியாறு -நம்பியாறு இணைப்பு திட்டப்பணி: பொதுப்பணித்துறை அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, பொதுப்பணித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த கோரி திமுக முன்னாள் எம் எல் ஏ அப்பாவு, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

திட்டத்தை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வில்லை என அப்பாவு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம் 2020 டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு பணிகள் தொடர்பான அட்டவணை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமன்ற உறுதிமொழிக் குழு தலைவர், சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, பணிகளில் முன்னேற்றம் உள்ளதாக அறிவித்துள்ளார் எனவும், இதுசம்பந்தமான அறிக்கை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், இன்று முதல் அக்டோபர் 4 வரையில் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT