பந்தலூர்
நீலகிரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று ஆய்வு செய்தார்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி முதல் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு 5000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசு சார்பில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார். அதன்பிறகு, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரு.10 லட்சம் தொகையை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இந்நிலையில், உதகையில் உள்ள தமிழகம் விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். கூடலூர், கீழ்நாடுகானி, எலியாஸ் கடை, சேரம்பாடி, சேரங்கோடு, கையுண்ணி, அம்பலமூலா, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஆய்வின்போது, தேனி மக்களவைத் தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், எம்எல்ஏக்கள் ஓ.கே.சின்னராஜ், சாந்தி ஆ.ராமு, மாவட்ட கண் காணிப்பு அதிகாரி சந்திரகாந்த் காம்ளே, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் உடனிருந்தனர்.