துாத்துக்குடி
சென்னை தமிழ்ச் சங்கம் சார்பில் பன்னாட்டு முருக பக்தர்கள் மாநாடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை தமிழ்ச் சங்க தலை வர் இளங்கோவன் தலைமை வகித்தார். புரவலர் பாலசுப்பிர மணியன் வரவேற்றார். தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர். இலங்கை அமைச்சர்கள் செந்தில் தொண்டை மான், ராதாகிருஷ்ணன், மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர்.
மாநாட்டு மலரை வெளியிட்டு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும்போது, “நம் கலாச்சாரத்தை பாதுகாக்க குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே பக்தியைச் சொல்லி வளர்க்க வேண்டும். தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழமையான கோயில்களில் கும்பா பிஷேகம் நடத்த வெளிநாட்டுவாழ் தமிழர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கும்பாபிஷேகம் நடத்த 3 துறை களிடம் அனுமதி வாங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் கால தாமதம் ஏற்படுகிறது. தொழிற் சாலைகளுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படு வது போல், கோயில் கும்பாபிஷேக அனுமதிக்கும் ஒற்றைச்சாளர அனு மதி முறையை அரசு கொண்டுவர வேண்டும்” என்றார் அவர்.
அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந் திரன் பேசும்போது, “முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அறநிலையத்துறை தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். திருச்செந்தூரில் இடிந்த சுற்று பிரகார மண்டபத்துக்கு பதிலாக, புதிய மண்டபம் பழமை மாறாமல் விரைவில் கட்டப்படும். அதற்கு முன்பு ரூ.3.50 கோடியில் தற்காலிக சுற்று பிரகார மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அனு மதி கிடைத்ததும் விரைவில் பணி கள் தொடங்கப்படும்” என்றார்.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசும்போது, “தமிழகத்தில் ஆன்மிக திருவிழாக்கள் அதிமுக ஆட்சியில்தான் நடக்கின்றன. 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக் கும் தாமிரபரணி புஷ்கரம், காவிரி புஷ்கரம் ஆகியவை இந்த ஆட்சி யில்தான் வந்தன. எம்ஜிஆர் ஆட்சிக்கு பிறகு மீண்டும் அதிமுக ஆட்சியில்தான் அத்திவரதர் தரிச னம் நடக்கிறது. எச்.ராஜாவின் கோரிக்கையை முதல்வர் பரிசீ லித்து நல்ல முடிவு எடுப்பார்” என்றார். மடாதிபதிகள் மற்றும் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் கலந்துகொண்டனர்.