சென்னை
பழனி முருகன் கோயிலின் மிக பிரபலமான பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது இதுவே முதன்முறை.
பழனி முருகன் கோயிலின் இணை ஆணையர் பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், புவிசார் குறியீடு வழங்கும் அமைப்பின், துணை பதிவாளர், பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதை உறுதி செய்தார். பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பட்டது விரைவில் இணையதளத்தில் பதிவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய், கற்கண்டு, பேரிச்சை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதில், சிறிதளவுகூடத் தண்ணீர் சேர்க்கப்படாது. இதனால், பஞ்சாமிர்தம் பாகு நிலையுடன் சுவையானதாக மாறுகிறது. மேலும், கெட்டுப் போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப்பொருட்களும் இதில் கலக்கப்படுவதில்லை. இது, இந்திய அரசின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட பகுதியில் பிரத்யேகமாக விளையும் அல்லது தயாரிக்கப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. சமீபத்தில் கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. பஞ்சாமிர்தத்துடன் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கிடைத்துள்ள புவிசார் குறியீடுகளின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது.