ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில், ஒரு பெண் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது பொருத்தமான நடவடிக்கைதான் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயல லிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப்பின், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு கொள்கை முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி, சென்னை போயஸ் தோட்டத்தில் 10 கிரவுண்டு 322 சதுர அடி பரப்புள்ள பகுதியை நில எடுப்பு செய்து, அதை நினைவு இல்லமாக மாற்ற அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 5, 8 மற்றும் 11 ஆகிய நாட்களில் அந்த பகுதி மக்களிடம் சமூக தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு நடந்தது. அதில், போக்குவரத்து நெரிசல், அடிப்படை வசதிகள் குறித்து அதிகமானோர் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்த பகுப்பாய்வு அதே மாதம் 14-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினார்.
அதில் பெறப்பட்ட கருத்துகள், செய்தித்துறைக்கு அனுப்பப்பட்டு, பதிலுரை பெறப்பட்டது. அந்த பதிலுரை சமூக தாக்க மதிப்பீட்டு முகமைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, முகமை தனது இறுதி அறிக்கையை அளித்தது. இதில், போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பொதுமக்களின் பல்வேறு கேள் விகளுக்கு பதிலளிக்கப்பட்டிருந் தது. இந்த அறிக்கை தகவல்களை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் தனது இறுதி அறிக்கையை அளித்துள் ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப் பதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் சமூக பொருளாதாரம் மற்றும் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். ‘இரும்பு மங்கை’ என போற்றப்பட்டவர். 6 முறை தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். ஆணா திக்க சமூகமான இந்தியாவில் தனியொரு பெண்ணாக வெற்றிகர மாக வாழ்ந்து காட்டியவர்.
எனவே, வேதா நிலையத்தை நில எடுப்பு செய்தது, நியாயமான காரணங்கள், பொதுநலன் அடிப் படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். நில எடுப்புக்கு தேவைப்படும் பூர் வாங்க தொகை ரூ.32 கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 827 ஆகும்.
அதேநேரம், 10 கிரவுண்டு 322 சதுர அடி நிலம் இந்த திட்டத்தை செயல்படுத்த மிகவும் குறைந்த நிலப்பரப்பு ஆகும். சென்னை மாநகராட்சி பகுதியில் உபரி நிலங்கள் இருந்தாலும், அந்த பகுதியில் நினைவு இல்லம் ஏற் படுத்துவது மக்களின் உணர்வு களுக்கு எதிரானதாக அமையும். மேலும், நில எடுப்புக்கான பரப்பு வருமானவரித் துறையால் முடக்கப் பட்டுள்ளது. மறைந்த முதல்வரின் வாரிசுகளாக தங்களை அறிவிக்க தீபா, தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, நில எடுப்புக்கான தொகை வழக்குகளைக் கருத்தில் கொண்டு நீதிமன்றத்தில் செலுத்தப்படும்.
போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க டிஎம்எஸ், செம்மொழி பூங்கா வளாகங்களை வாகனங்கள் நிறுத்த பயன்படுத்தலாம். செம் மொழி பூங்கா பகுதியில் உள்ள 33 கிரவுண்டு காலி நிலத்தில் 30 பேருந்துகள், 60 சிற்றுந்துகளை நிறுத்த இடவசதி உள்ளது.
டிஎம்எஸ் வளாகத்தில் 60 சிற்றுந்துகளை நிறுத்த முடியும். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆன்லைன் வசதி மூலம் பார்வையாளர்கள் முன்பதிவு செய்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளதைப் போல், போயஸ் கார்டனிலும் ஆன்லைன் மூலம் பார்வையாளர்கள் பதிவு செய்து பார்க்க அனுமதிக்கலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயல லிதா, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு முன்மாதிரி தலை வராகவும், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண் எந்த அள வுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட் டாகவும் திகழ்ந்தார். எனவே, அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவது பொருத்தமான நடவடிக்கை யாகும்.
இவ்வாறு அறிக்கையில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.