அத்திவரதர் தரிசன நிகழ்ச்சியில் சிறப்பான பாதுகாப்பு பணியை செய்த அனைத்து தரப்பு காவற்பணியினரையும் பாராட்டுவதாக ஐபிஎஸ் சங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான சங்கம் பொது நிகழ்வுகளில் தங்கள் கருத்தை பதிவு செய்வதில்லை. இந்த சங்கத்தில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் உறுப்பினராக உள்ளனர். இதன் தலைவராக டிஜிபி பிரதீப்.வி.பிலிப் செயல்படுகிறார். தலைவராக ஐஜி மகேஷ்குமார் அகர்வாலும், பொருளாளராக ஐஜி டி.எஸ்.அன்பும் செயல்படுகின்றனர்.
அத்திவரதர் தரிசன பாதுகாப்பு நிகழ்ச்சி 40 நாட்களை கடந்து நடக்கிறது. இதுவரை 70 லட்சம் பக்தர்கள் திரண்ட நிகழ்வில் சிறு அசம்பாவிதம்கூட நிகழாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் அத்திவரதர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் ஒருவரை மாவட்ட ஆட்சியர், சரியாக பணியாற்றவில்லை என பொதுவெளியில் கண்டப்படி திட்டும் காணொளி வெளியாகி பரபரப்பானது.
காவலர்கள் 40 நாட்களுக்கும் மேலாக தூக்கம், உணவு, தங்குமிடம் மறந்து காவற்பணியை செய்வதை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் ஆட்சியரின் திட்டு பெரிய அளவில் விமர்சனத்தை கிளப்பியது. காவலர்களுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
பலத்த விமர்சனம் எழுந்ததை அடுத்து ஆட்சியர் தன்நிலை விளக்கம் அளித்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தலைமைச் செயலரும், டிஜிபியும், ஆட்சியரும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியது.
அத்திவரதர் தரிசன நிகழ்வில், காவல்துறையின் பாதுகாப்புப்பணியை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை அளித்துள்ளது. இதற்குமுன் எந்த நிகழ்விலும் இதுபோன்று அந்தச் சங்கம் பாராட்டியதில்லை.
இதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்தலைவர் டிஜிபி. பிரதீப் வி பிலிப் அறிக்கை:
“அத்திவரதர் நிகழ்ச்சியை அமைதியாகவும், நல்லபடியாகவும் பொதுமக்கள் தரிசிக்க தமிழக காவல்துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. அந்தப்பணியில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையைச் சேர்ந்த காவலரையும் ஐபிஎஸ் சங்கம் பாராட்டுகிறது.
சமூகத்தின் அனைத்து தரப்பினரும் காவல்துறையினரை மதித்து அவர்களின் கடமைகளை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஐபிஎஸ் சங்கம் இந்தப்பணியில் ஈடுபட்ட காவல்துறையின் ஒவ்வொரு நபருடைய சேவையையும் பாராட்டுகிறது”.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதர் பணியில் ஆட்சியரின் செயல் கடந்த சில நாட்களாக விமர்சனத்துக்குள்ளான நிலையில், போலீஸாரின் பணியை ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது போலீஸாருக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக பலரும் கருதுகின்றனர்.