நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரும் வழக்கில், மசோதா குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விவாதமும் நடத்தப்பட்டதாக தமிழக அரசு அளித்த விளக்கத்தை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழக அரசு பெற்றுக் கொண்டு விட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை சட்டப்பேரவையில் கூட தெரிவிக்காதது ஏன்? என விளக்கமளிக்கும் படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கைப் பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதனால் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறையைப் பின்பற்றவில்லை என்றால் தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என அறிவுறுத்தினர்.
எந்தக் காரணமும் தெரிவிக்காமல், மசோதாக்கள் திருப்பி அனுப்பிப்பட்டதால், நடைமுறை நிறைவடையவில்லை எனக் கருத வேண்டியுள்ளது. அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப்பட்டது. மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களைத் தெரிவிக்கும் படி மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25-ம் தேதி முதல் கடந்த மே 5-ம் தேதி வரை 11 கடிதங்களை தமிழக அரசு அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.