தமிழகம்

நேர்கொண்ட பார்வை படத்துக்கு அதிக கட்டணம்: கூடுதல் பணத்தை பொதுமக்களுக்கு வழங்கிய சார் ஆட்சியர் 

செய்திப்பிரிவு

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்துக்கு வசூலிக்கப் பட்ட கூடுதல் கட்டணத்தை பொது மக்களிடமே திருப்பி வழங்க ராணிப் பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் நடவடிக்கை எடுத்தார்.

நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படத்துக்கு ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், நெமிலி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.200 முதல் 350 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் கிடைத்துள்ளது. அதன் பேரில், வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டை சார் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் மாலை திடீர் ஆய்வு செய்தனர்.

அதில், ராணிப்பேட்டையில் நேர் கொண்ட பார்வை திரைப்படம் வெளியான இரண்டு திரையரங்கு களில் சார் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, ரூ.200 வரை கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. ஜிஎஸ்டி உள்பட ரூ.130 மட்டுமே வசூலிக்க வேண்டிய நிலையில் அதிகமாக வசூலித்த கட்டணத்தை பொதுமக்களுக்கே திருப்பி அளிக்குமாறு சார் ஆட்சியர் உத்தரவிட்டார். அதேபோல் ஆற் காடு, பனப்பாக்கம், நெமிலி பகுதிகளில் ஆய்வு செய்து, கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் பொதுமக்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

ஒரே நாளில் பொதுமக்களுக்கு ரூ.34 ஆயிரத்து 400 பணம் திருப்பி வழங்கப்பட்டது. ஏ.சி வசதியுள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.120-ம், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கட்டணம் ரூ.100 எனவும், ஊராட்சி பகுதிகளில் ரூ.75 மட்டுமே வரியில்லாமல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக கட்டணம் வசூலித்த திரையரங்கங்களுக்கு அபராதம் விதிக்கவும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT