ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம் 
தமிழகம்

அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் தமிழக அரசு மீது குற்றம்சாட்டுகிறார்: ஓ.பன்னீர்செல்வம் பதில்

செய்திப்பிரிவு

சென்னை

அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை கடந்த இரு நாட்களாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அவர் இன்று (திங்கள்கிழமை) மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். கனமழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஸ்டாலின், தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

இதையடுத்து ஸ்டாலின் தமிழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மெத்தனமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், "தமிழக அரசு குறைந்தபட்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு எடுத்திருந்தால் இப்படிப்பட்ட சூழல் வந்திருக்காது. இனிமேலும் இவ்வாறு மெத்தனமாக இருக்காமல், பணிகளை முடுக்கிவிட வேண்டும். திமுக இங்கு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறது. ஆனால், ஆளும் அரசு பெயருக்கு ஓரிரு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கிறது. அந்த அமைச்சர்களும், பப்ளிசிட்டிக்காக வந்துவிட்டு, பாதிக்கப்பட்ட இடங்களை முழுமையாக ஆராயாமல், மக்களைச் சந்திக்காமல் சென்றிருக்கின்றனர். இது கண்டனத்திற்குரியது", என தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடும் ஸ்டாலின்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "நீலகிரியில் பெய்த அதிக மழையால் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் வருவாய்த்துறை அமைச்சர் நேரடியாக சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை கூறுவது அவருக்கு வாடிக்கையாக உள்ளது", என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT