சென்னை
தமிழகத்தைச் சேர்ந்த 2 மதுபான ஆலைகளில் நடந்த வருமான வரித் துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.700 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தியாகராய நகர் சிஐடி காலனியில் தனியார் மதுபான ஆலை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. கடந்த 6-ம் தேதி காலை முதல் 9-ம் தேதி வரை இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
55 இடங்கள்
தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் தொடர்புடைய 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. தமிழக டாஸ்மாக் நிறுவனத்துக்கும் இந்த ஆலையில் இருந்து மது விநியோகம் செய்யப்படுகிறது.
வரி ஏய்ப்பு புகாரின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிறுவனத்துக்கு சொந்தமாக காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து உயர் ரக மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
6 ஆண்டுகளாக..
இந்த ஆலை தொடர்பான இடங் களில் நடத்தப்பட்ட சோதனையில், கடந்த 6 ஆண்டுகளாக பல கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்ட தாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. மது தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் மற்றும் பாட்டில்களை அதிக அளவில் வாங்கியதாக கணக்கு காட்டி மோசடி நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது ரூ.400 கோடிக்கு கணக்கில் வராத சொத்துகளின் ஆவணங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக வரு மான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதே போல மது விற்பனையில் ஈடுபட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமும் பல கோடி வருவாயை கணக்கில் காட்டவில்லை என வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. அந்நிறுவ னத்துக்கு சொந்தமாக சென்னை மற்றும் காரைக்காலில் உள்ள 7 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் சோதனை நடந்து வரு கிறது. இதில் ரூ.300 கோடி மதிப் புள்ள கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
மேலும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் காரில் எடுத்துச் செல்ல முயன்ற ரூ.4 கோடியே 50 லட்சத்தையும் அதிகாரிகள் பறி முதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்நிறுவனம் தொடர்பான இடங் களில் சோதனை நடந்து வருகிறது.