நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பதைக் கண்டித்து மே 17 இயக்கம் தலைமையில் 8 தமிழ் அமைப்புகள் வள்ளுவர் கோட்டம் அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா. திருமுருகன் பேசியதாவது:
பிரதமர் பதவி ஏற்பு விழா என்பது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு நடத்தப்படுவது. இது தனிப்பட்ட ஒரு கட்சியின் விழா அல்ல. தற்போது மோடியின் பதவியேற்பு விழாவுக்கு உலகத் தலைவர்களை அழைத்திருப்பது நாட்டின் வெளியுறவு கொள்கை சம்பந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் நாட்டின் வெளியுறவு கொள்கை என்பது மாநிலங்களின் கருத்துகளையும் உள்ளடக்கியது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் நடைபெற்ற போரினால் பலியாகியுள்ளனர். இதைக் கண்டித்துத் தமிழகத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவி யேற்பு விழாவுக்கு அழைத் துள்ளது தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.