தமிழகம்

நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாததால் 370-வது சட்டப் பிரிவு நீக்கம்: காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்படும் - சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை

நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லாத அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்திய குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பதவி ஏற்று இரண்டு ஆண்டுகளாகி விட்டன. இந்தக் காலக்கட்டத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டமளிப்பு விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு மற்றும் புகைப்படங்களுடன் கூடிய புத்தகத்தை, “கவனித்தல், கற்றல், தலைமையேற்றல்" என்ற தலைப்பில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு தயாரித்துள்ளது. இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று மாணவராக இருந்தபோதே போராடிய வெங்கய்ய நாயுடு, பிற்காலத்தில் மாநிலங்களவைத் தலைவராகப் பதவியேற்று, மாநிலங்களவையை வழிநடத்தும்போது, அந்த அவையிலேயே இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பது சிறப்புக்குரியது. பொதுவாழ்க்கையில் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு வெங்கய்ய நாயுடு முன்உதாரணமாகத் திகழ்கிறார்.

இந்த சட்டப்பிரிவால் இந்தியாவுக்கும் காஷ்மீருக்கும் எந்தப் பயனும் இல்லை. அதனால் அந்தப் பிரிவை நீக்குவதில் உறுதியாக இருந்தேன். இப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலுமாக ஒடுக்கப்படும். இனி அங்கு வளர்ச்சி உத்வேகம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்புரையாற்றி பேசியதாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதால், அதுபற்றி நான் இப்போது பேசலாம். 370-வது பிரிவு நீக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். அந்த நடவடிக்கை தற்போது தேவையானதுதான். இந்த மசோதாவை மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது என்ன ஆகுமோ என்று பதற்றம் இருந்தது. மசோதா அறிமுகம் செய்யப்பட்டதும், உறுப்பினர்கள் விவாதிக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா 3-ல் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டதை அரசியல் ரீதியாகப் பார்க்காமல் நாட்டின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கையாக கருத வேண்டும். காஷ்மீர், ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒருபகுதிதான். எனவே, நாட்டின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு நீக்கப்பட்டது.

மேலும் நாட்டின் நலன் கருதி நீதித்துறை, நிர்வாகம், ஊடகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் 60 ஆயிரம் வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 44 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. குறிப்பிட்ட காலத்துக்குள் வழக்குகளை முடிக்கும் வகையில் நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் தொடங்க வேண்டும். அதுபோல நாட்டின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் அமைக்க வேண்டும். மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியிலேயே வாதிட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.
பின்னர் முதல்வர் கே.பழனிசாமி பேசும்போது, “இங்கு வெளியிட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடுவின் அனுபவங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும். அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் நுழைய விரும்பும் இளைஞர்களுக்கு இப்புத்தகம் ஒரு வழிகாட்டியாகவும் கிரியா ஊக்கியாகவும் இருக்கும்" என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தற்போது அந்த பிரிவை நீக்கி பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்" என்றார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தனது வாழ்த்துரையில், “உலகத்தில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழியாகும். 90 நாடுகளில் தமிழ் பேசப்படுகிறது. ஆனால், தமிழை பிற மாநிலங்களிலும் மற்ற நாடுகளிலும் கற்பிப்பதற்கான வழிவகையில்லை. அதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் கஸ்தூரிரங்கன், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, அப்போலோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவில் அமித்ஷா விடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு அளித்தார்.

கிருஷ்ணன், அர்ஜுனன் போல..

நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “வெங்கய்ய நாயுடுவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் இந்த விழா நடைபெறுவது நமக்குப் பெருமை. மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் இன்னும் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்குவதற்காக அமித் ஷா எடுத்த நடவடிக்கைகள் சிறப்பானவை. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்ட அவருக்கு எனது வாழ்த்துக்கள். காஷ்மீர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசிய பேச்சுக்கள் அற்புதம். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணன், அர்ஜுனன் போன்றவர்கள். இவர்களில் யார் கிருஷ்ணன், யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. அவர்களுக்குத் தான் தெரியும்" என்றார்.

SCROLL FOR NEXT