சென்னை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாணவராக இருக்கும்போதே போராடியவர் வெங்கய்ய நாயுடு என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் வெங்கய்ய நாயுடு ஆற்றிய பணிகள், உரைகள், சந்திப்புகள், முக்கிய நிகழ்வுகள் ‘லிசனிங், லேர்னிங் அண்டு லீடிங்' (கேட்டல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. பாஜக தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட வேண்டும் என்று மாணவராக இருந்தபோதே போராடிய வெங்கய்ய நாயுடு, பிற்காலத்தில் மாநிலங்களவைத் தலைவராக பதவியேற்று, அவையை வழிநடத்தும்போது, அந்த அவையிலேயே இந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது சிறப்புக்குரியது என்றார்.
இந்தச் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம், காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்படும் என்று தாம் முழுமையாக நம்புவதாக குறிப்பிட்ட உள்துறை அமைச்சர், இனி அங்கு வளர்ச்சி உத்வேகம் பெறும் என்றார். இந்தச் சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் தற்போது அந்தப் பிரிவு நீக்கப்பட்டதில் தமக்கு மாறுபட்ட கருத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.
துடிப்புடன் செயல்படக்கூடியவரான வெங்கய்ய நாயுடு, அவரது இரண்டாண்டு பதவிக்காலத்தில் 65 பொது நிகழ்ச்சிகள், மாணவர்களுடனான 35 சந்திப்புகளை மேற்கொண்டதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 97 நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பதுடன், பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும், பங்கேற்று வழிகாட்டியிருப்பதாகவும் தெரிவித்தார். அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நகர்ப்புற மக்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டம், பொலிவுறு நகரங்கள் ஆகிய இரண்டு மாபெரும் திட்டங்களை கொண்டுவந்தவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் அவர் நடுநிலை தவறாமல் கடமையாற்றி வருவதாகவும் திரு. அமித் ஷா தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர், மாநிலங்களவைத் தலைவர் என்ற முறையில் வெங்கய்ய நாயுடு, எதிர்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க அனுமதி வழங்கும் அதேநேரத்தில், அரசு தனது கொள்கை மற்றும் திட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
அரசியல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையில் முதலில் நிறைவேற்றியதில், வெங்கய்ய நாயுடுவின் வழிகாட்டுதல் மற்றும் அணுகுமுறை பாராட்டத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட அணுகுமுறை காரணமாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார்.
வாழ்க்கையின் அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் வெங்கைய நாயுடு திகழ்வதாக கூறிய ஜவடேகர், தாய், தாய்நாடு, தாய்மொழி ஆகியவற்றை முன்நிறுத்தி வருங்கால சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஊக்கமளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.