தர்மபுரி
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியுள்ளதால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நிலவரப்படி கர்நாடக அணைகளில் இருந்து 3 லட்சம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த இரு நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இதனால், அம்மாநிலங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை நிரம்பியது.
இதையடுத்து கபினி அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் தற்போது காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. உப அணையான தாரகாவில் இருந்து நொடிக்கு 25,000 கனஅடி வீதம் காவிரியில் பாய்கிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 50,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது இந்தநிலையில் இன்று பிற்பகலில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் கூடுதல் நீர் அனைத்தும் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது. 1.75 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் இருந்து மொத்தமாக தமிழகத்துக்கு 3 லட்சம் கனஅடி நீர்திறக்கப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு ஒன்றரை லட்சம் கனஅடி நீர் வருவதால், அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்று காலை 22 டிஎம்சி.,யாக இருந்த அணையின் நீர்இருப்பு, இன்று (ஆக.,11) 30.59 டிஎம்சி.,யாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.