சு.கோமதிவிநாயகம்
கோவில்பட்டி
நாகலாபுரம் அருகே ரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஒரு ஆசிரியை மட்டுமே பணியாற்றி வருகிறார். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் நாகலாபுரம் அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி (ஆங்கில வழி) செயல்பட்டு வருகிறது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 31 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட 2 ஆசிரியைகள் பணியில் இருந்தனர். இதில் ஒரு ஆசிரியைக்கு கடந்த ஆண்டு பணியிட மாற்றம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த ஜூன் 3-ம் தேதி அவர் இப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் தற்போது வரை தலைமை ஆசிரியை மட்டுமே பணியில் உள்ளார். மாறுதலாகி சென்ற ஆசிரியருக்கு பதில் இதுவரை வேறு ஆசிரியர் நியமிக்கப் படவில்லை. இதனால் தலைமை ஆசிரியை மட்டுமே அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்களை நடத்துவதுடன், நிர்வாக வேலை களையும் கவனித்து வருகிறார். ஒரு வகுப்புக்கு தலைமை ஆசிரியை பாடம் நடத்தும் போது, மற்ற வகுப்பு மாணவ, மாணவிகள் குழுவாக அமர்ந்து தாமாகவே படித்து வருகின்றனர். இதனால் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுவதால் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
ஆனால், இதுவரை ஆசிரியர் யாரும் பணியில் சேரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ரெட்டியபட்டி கிராம பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராஜ், ஜோதி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முதன்மை கல்வி அலுவலர் முகாமில் இருந்ததால், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, விரைவில் கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படுவார் என அவர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து ஜோதி கூறும்போது, “எங்கள் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆங்கில வழி ஆரம்பப்பள்ளி தனியார் பள்ளிக்கு இணையான கல்வியை வழங்கி வருகிறது. . ஆனால், தற்போது தலைமையாசிரியை மட்டுமே பணியில் உள்ளதால் எங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இதற்கு முன்பு 3 முறை மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து முறையிட்டோம். அதன்பேரில், பள்ளிக்கு மற்றொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார்.
ஆனால் அவர் இதுவரை பணியில் சேரவில்லை. இப்பிரச்சி னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எங்கள் குழந்தைகளை வேறு அரசு பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும்” என்றார்.