தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் தனது வீட்டில் உள்ள மழை நீர் வடிகட்டியை பார்வையிடும் சோமசுந்தரம். 
தமிழகம்

குடிக்க, குளிக்க, சமைக்க மழை நீர்தான்: 10 ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்

செய்திப்பிரிவு

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக குடிக்கவும், குளிக்கவும், சமைக்கவும் வீட்டில் சேமிக்கப்படும் மழை நீரையே பயன்படுத்தி வருகிறார்.

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் எம்.சோமசுந்தரம்(66). பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரது வீட்டில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் மழைநீரைச் சேமித்து குடிக்கவும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். 400 சதுரஅடி அளவிலான முதல் மாடியில் விழும் மழைநீரை, வீட்டின் உள்ளே வெயில் படாத இடத்தில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு டேங்க் மற்றும், 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி ஒன்றை பூமிக்கு அடியிலும் அமைத்து இவற்றில் சேமித்து வருகிறார். இதன் மூலம் ஆண்டுக்கு குறைந்தது இருமுறை மழை பெய்யும் போது கிடைக்கும் 14 ஆயிரம் லிட்டர் வரையிலான மழை நீரைச் சேமித்துப் பயன்படுத்தி வருகிறார். அத்துடன் அதிக மழை பெய்யும்போது தொட்டிகளில் சேமிக்கப்பட்டதை விட எஞ்சிய நீரை 250 அடி ஆழத்துக்கு அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லின் உள்ளே செலுத்தி வருகிறார்.

குடும்பத்தில் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக குடிக்க, குளிக்க, சமையலுக்கு, துணிகள் துவைக்க என ஒரு ஆண்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவையை மழை நீரைக் கொண்டே பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

இதுகுறித்து சோமசுந்தரம் கூறியதாவது: மழைநீரில் மாசு குறைவு, பாக்டீரியா உள்ளிட்ட திடப்பொருட்கள் அளவு அதிகம் உள்ளது. மழைநீரை வெயில் படாமல் நிழலில் சேமித்து வைத்தால் கெட்டுப்போகாது, பூஞ்சாணம் படராது. மனிதனின் உடலுக்குத் தேவைப்படும் அமிலத்தன்மையும், காரத்தன்மையும் மழைநீரில் அதிகம் உள்ளது. மழை நீரைத்தான் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர் களுக்கும் குடிக்கத் தருகிறேன். 2014-ல் நடைபெற்ற என் மகளின் திருமணத்தின்போதும் மழை நீரைத்தான் பயன்படுத்தினேன். மழைநீர் சேமிப்பு வடிகட்டி மற்றும் தொட்டியை அமைக்க குறைந்தது ரூ.25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. 4 ஆண்டுக்கு ஒருமுறை வடிகட்டியை சுத்தம் செய்து மாற்ற வேண்டும்.

மழை நீர் சேமிப்பு குறித்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆலோசனை வழங்கி வருகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT