தமிழகம்

பக்ரீத் பண்டிகை: சேலம் கொங்கணாபுரம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை 

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஆக. 10) ஒரே நாளில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகள் விற்பனையானது.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் எனும் ஈகை திருநாளில் ஏழை, எளியவர்களுக்க குர்பானி வழங்குவது வழக்கம். இப்பண்டிகைக்காக அனைத்து இஸ்லாமிய மக்களும் ஆடுகள் வாங்குவது உண்டு என்பதால், சேலத்தில் விற்பனை அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் ஆட்டு சந்தைக்கு பெயர் பெற்றது. ‘சேலம் கருப்பின ஆடு ருசி மிகுதியானதால் அதற்கென தனி வரவேற்பு உள்ளது. நேற்று சனிக்கிழமை கொங்கணாபுரத்தில் ஆட்டு சந்தை கூடியது. இங்கு வாரம் தோறும் சராசரியாக 7 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வருவார்கள்.

வரும் 12-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகள் அதிகளவு விற்பனையாகும் என்பதால், விவசாயிகளும், வியாபாரிகளும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் சேலம் கருப்பாடு, செம்மரி ஆடுகள் உள்ளிட்டன விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளிடம் ஆடுகளை பலரும் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.

இதுகுறித்து ஆடுகளை விற்பனை செய்த வியாபாரிகள் கூறும் போது, ‘சேலம் கருப்பின ஆடு ருசி மிகுதியானதால் இதற்கென தனி வரவேற்பு உள்ளது. இதனால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்கி செல்ல ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.

நேற்று காலை 6 மணி முதல் பகல் 10 மணி வரையிலான நேரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. நான்கு கிலோ எடை முதல் 30 கிலோ எடை வரையிலான ஆடுகள் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரையில் ஆடுகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.

கொங்கணாபுரம் ஆட்டு சந்தையில் நேற்று மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளது,’ என்றார்.

SCROLL FOR NEXT