தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றுவிட்டு பாஜக திமுகவை விமர்சிக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கனிமொழி, தருவைகுளத்தில் நடைபெறும் பெண்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "வேலூர் வெற்றி தாமதமாக வருவதற்குக் காரணம் என்னவென்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு பல சூழ்ச்சிகளின் காரணமாக தேர்தல் தடுத்து நிறுத்தப்பட்டு சற்றுத் தாமதமாக இப்பொழுது தேர்தல் நடத்தப்பட்டு அதில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட வேலூர் தொகுதியில் திமுக வாக்கு வித்தியாசம் மிகக் குறைவு. இது திமுகவிற்கு வெற்றி கிடையாது என்றெல்லாம் பாஜக மாநில தலைவர் தமிழிசை விமர்சிக்கிறார். முதலில், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெறட்டும். அப்புறம் அவா் இப்படிப் பேசினால் பரவாயில்லை" என்றார்.
கருத்து வேறுபாடு ஏதும் இல்லை..
அவர் மேலும் பேசும்போது, "காங்கிரஸுடன் திமுகவுக்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. லடாக் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது. அதை யாரும் எதிர்க்கவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கிறது" எனக் கூறினார்.
ஜெயக்குமார் பேச்சை பெரிதாக்க அவசியமில்லை..
"தேர்தலில் தோல்வி வந்த பிறகு அதை சரிக்கட்ட பல காரணங்களை சொல்வது இயற்கையான ஒன்று. மேலும் தோல்வி இல்லையென்று சொல்வதற்கான காரணங்களைத் தேடுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அதிமுகவின் படிப்படியான தோல்விகளை கண்கூடாக அமைச்சர் ஜெயக்குமார் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதைத் தாண்டி தன்னுடைய மனதை ஆற்றுப்படுத்தி கொள்வதற்காக அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை"