இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீரத்தைப் பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயலும். ஐ.நா. மன்றம் தலையிடும் நிலையும் உருவாகி இருக்கின்றது. காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மேற்கொண்ட நிலை ‘வரலாற்றுப் பிழை’ மீள முடியாத புதைகுழிக்குள் இந்தியாவைத் தள்ளி இருக்கின்றது என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மதிமுகவின் உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று (10.08.2019 சனிக்கிழமை), சென்னை தாயகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
''ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமை அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மற்றும் அம்மாநில நிரந்தரக் குடிமக்களுக்கு சிறப்புரிமை வழங்கும் சட்டப் பிரிவு 35ஏ ஆகிய இரண்டையும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் சட்ட முன்வடிவு கொண்டுவந்து நீக்கி இருக்கின்றது.
நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் தொடர்பான சட்ட முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆகஸ்டு 5 ஆம் தேதி மாநிலங்கள் அவையில் இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்த சிறிது நேரத்திலேயே அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார் என்று குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துவிட்டது. நாடாளுமன்றத்திற்கு இதைவிட பெரும் அவமதிப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.
காஷ்மீர் மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினைகளை பாஜக அரசு அணுகி உள்ள முறை காஷ்மீரை - கொசாவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் போன்று மாற்றிவிடும் ஆபத்து நேரிடும் என்று மாநிலங்களவையில் வைகோ மிகச் சரியாக எச்சரிக்கை முழக்கமிட்டுள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்த பின்னர், காஷ்மீர் சமஸ்தான மன்னர் ஹரிசிங், அங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள் என்பதால், காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதா? பாகிஸ்தானுடன் சேர்ப்பதா? என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.
காஷ்மீரை இணைத்துக்கொள்ள விரும்பிய பாகிஸ்தான், தனது ராணுவத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்திய எல்லையிலிருந்து இந்திய இராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு ராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின.
காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அதனை சுதந்திர காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) என்று பாகிஸ்தானும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று இந்தியாவும் கூறி வருகின்றன. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக்கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இரு நாடுகளும் போட்டியிட்டன.
இந்தப் பிரச்சினை ஐக்கிய நாடுகள் மன்றத்திற்குச் சென்றதால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் 21.04.1948 இல் தீர்மானம் (47) நிறைவேற்றப்பட்டு, இரு நாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நிறைவேறவில்லை. மேலும் காஷ்மீர் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐ.நா.மன்றத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது.
பண்டித நேரு தலைமையிலான இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டது. ஆனால், பிரதமர் நேரு ஒப்பந்தப்படி காஷ்மீரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தாமல், ஐ.நா. ஒப்பந்தத்தைக் கை கழுவினார். காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை நிலைநாட்டிட அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் 35ஏ உருவாக்கப்பட்டு, காஷ்மீரத்திற்கு சிறப்புரிமை வழங்கப்பட்டது.
காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கப்பட்ட போதே, ஜனசங்கத் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜி அதனை எதிர்த்தார். தற்போது நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுவிட்ட பாரதிய ஜனதா கட்சி அரசு, தமது இந்துத்துவ மதவாதக் கண்ணோட்டத்தைச் செயல்படுத்தி இருக்கின்றது.
காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நிர்மூலம் ஆக்கிவிட்டு, ‘ஆளுநர் ராஜ்யம்’ நடத்துகின்ற மத்திய அரசு, காஷ்மீர் மக்களின் உணர்வுபூர்வமான எண்ணங்களைப் பொசுக்கிவிட்டு, அம்மக்களின் கருத்தறியாமல் எதேச்சதிகாரமான முறையில் செயல்பட்டு இருக்கின்றது.
காஷ்மீர் மக்கள் நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்று கொந்தளிக்கின்ற வேளையில், அங்கு தீவிரவாதம் மேலும் வலுவடையும். இந்தியாவின் பகை நாடுகள் காஷ்மீரத்தைப் பன்னாட்டு விவகாரமாக மாற்றுவதற்கு முயலும். ஐ.நா. மன்றம் தலையிடும் நிலையும் உருவாகி இருக்கின்றது.
வளர்ச்சியின் பெயரால் காஷ்மீர் பள்ளத்தாக்கு இனி பெரும் குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு, எழில் கொஞ்சும் காஷ்மீர் சிதைக்கப்பட்டுவிடும். காஷ்மீர் பிரச்சினையில் பாஜக அரசு மேற்கொண்ட ‘வரலாற்றுப் பிழை’ மீள முடியாத புதைகுழிக்குள் இந்தியாவைத் தள்ளி இருக்கின்றது என்பதால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றது''.
இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பிரதமர் மோடியைச் சந்தித்த வைகோ, இந்தியாவில் தயாராகும் ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடைத் தொழிலைக் காக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தைக் கைவிட வேண்டும்; அணை பாதுகாப்பு மசோதா கூடாது; கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக் கூடாது; சோழவள நாட்டைப் பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா மாநாட்டை செப்டம்பர் 15, 2019 அன்று சென்னையில் முழு நாள் மாநாடாக நடத்துவது என்று ஒரு தீர்மானமும், மதிமுக உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை, அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்குவது, கட்சியின் அமைப்புத் தேர்தல்களை அடுத்த ஆண்டு 2020 ஆகஸ்டு மாதத்திற்குள் நடத்தி முடிப்பது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
முகிலன் நண்பர் விசுவநாதனைக் கைது செய்ததைக் கண்டித்தும், சமூக ஆர்வலர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குப் போட்டு, அடக்குமுறையை ஏவும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்துக்கு வீட்டு வசதி, மகளிர் மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, வேலைவாய்ப்பு, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல், மத்திய அரசுக்கு திரும்பச் சென்றுள்ளதைக் கண்டித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நூற்பாலைகளுக்கு ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை, வட்டி சலுகை, மத்திய - மாநில அரசுகளுக்கான வரிகளைத் திரும்பப் பெறும் சலுகை, சர்வதேச விலைக்கு நிகராக இந்திய நூலின் விலையைக் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கோவை, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, அவலாஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பெரும் மழை பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மீட்புப் பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானமும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதித் தேர்தலில், திமுகவை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு தீர்மானம் என 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.