தமிழகம்

மதுவிலக்கு என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு முயற்சிக்கிறார் கருணாநிதி - ராமதாஸ் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் திண்டிவனத்தை அடுத்த தைலா புரத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

1971-ல் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மதுவிலக்கை அகற்றினார். அதன் விளைவாக 2 தலைமுறைகள் பாதிக்கப்பட்டன. தற்போது 3-வது தலைமுறையில் உள்ள 3 வயது குழந்தைக்குக்கூட மது புகட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முழு காரணம் கருணாநிதிதான்.

மது விற்பனையின் மூலம் கிடைக்கும் பணம் தொழு நோயாளிகளின் கையில் உள்ள வெண்ணைக்கு சமம் என்றார் அண்ணா. ஆனால், அண்ணாவின் வழியில் நடப்பதாக கூறும் கருணாநிதி அவருக்கும் அவர் கொள்கைக்கும் துரோகம் செய்துவிட்டு மதுக்கடையை திறந்தார்.

இன்னும் 8 மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள கட்சிகள், மக்கள் நலம் விரும்பிகள் மதுவுக்கு எதிராக போராடும் சூழ்நிலையில் நாமும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முழு மனமில்லாமல், திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு என்று கூறி கருணாநிதி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். 35 ஆண்டுகளாக நாங்கள் மது ஒழிப்புக்காக போராடி வருகிறோம்.

2008-ம் ஆண்டு 44 சமுதாய தலைவர்களை அழைத்துச் சென்று டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தோம். மருத்துவரின் (ராமதாஸ்) கொள்கையும், என் கொள்கையும் ஒன்றே என்று கூறி மது விற்பனை நேரத்தை ஒரு மணிநேரம் குறைத்தார். இன்று அவரது கட்சியினர் மது ஒழிப்புப் பற்றி ஏதேதோ பேசுகின்றனர்.

இவர்கள் ஆட்சியில் 2 சாராய ஆலைகள் தொடங்கப்பட்டன. பாரதியார் ’ஆலைகள் செய்வோம், கல்விச் சாலைகள் செய்வோம்’ என்றார். ஆனால், கருணாநிதி சாராய ஆலைகளை திறந்தார். பல பாவங்களை செய்த கருணாநிதி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பின்பு மதுவிலக்குப் பற்றி பேசலாம்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT